திருக்கடையூர் கோயில் திருக்குடமுழுக்கு விழா - தருமபுர ஆதீனம் முன்னிலையில் முதல் கால யாகம் தொடக்கம்
திருக்கடையூரில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் தொடங்கி உள்ளது
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது. 120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிர்த்திங்கா ஜெபம், உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, முக்கியஸ்தர்கள், பக்தர்கள், எந்த ஒரு இடையூறும் இன்றி வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளான கழிப்பறை குடிநீர் உள்ளிட்டவைகளும், மேலும் ஒவ்வொரு பணிக்காக ஒவ்வொரு குழுவினர் நியமிக்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது எனவும், ஆகையால் பொதுமக்கள் அனைவரும் விழாவில் வந்து கலந்து கொள்ளுமாறு தர்மபுரம் ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக சாலை பூஜை ஆலயத்தில் யாத்ரா தானம் செய்யப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட 12 சன்னதிகளில் இருந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, புனிதநீர் அடங்கிய கடங்கல் ஊர்வலமாக யாகசாலை பூஜை நடைபெறும் இடமான யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டு, சுவாமி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் துவங்கிய யாக சாலை பூஜையில் புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள், திருமடம் 33 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கனகசபை சுவாமிகள், ரத்தினகிரி சுவாமிகள் பாலமுருகன் அடிமைகள் பங்கேற்றனர். தொடர்ந்து முதல் காலம் யாகசாலை பூஜைகள் துவங்கி பூரனாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.