மஹாளய அமாவாசை : இதையெல்லாம் பண்ணலாம்.. இதையெல்லாம் பண்ணக்கூடாது..
இந்துக்களால் இன்று அக்டோபர் 6-ஆம் தேதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது.
இந்துக்களால் இன்று அக்டோபர் 6ஆம் தேதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களைப் போல் அல்லாமல் மகாளய அமாவாசை நாட்களில் முன்னோர்கள் வீடு தேடி வருவதால் நாம் அதற்கு ஆயத்தமாக வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது சாஸ்திர, சம்பிரதாயங்கள்.
மகாளய அமாவாசை என்றால் என்ன?
மகாளய பட்சம் 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பிலவ வருடம் புரட்டாசி 5ஆம் தேதி (செப்டம்பர் 21 ஆம் தேதி) பிரதமையில் ஆரம்பமானது.இது புரட்டாசி 20 ஆம் தேதி (அக்டோபர் 06) அமாவாசை வரை கடைப்பிடிக்கப்படும். அது தான் மகாளய அமாவாசை எனக் கூறப்படுகிறது.
நாம் என்ன செய்யலாம்; எவையெல்லாம் செய்யவே கூடாது!
மகாளய அமாவாசை நாளில் நாம் அதிகாலையில் குளித்து புறத் தூய்மையை உறுதி செய்துவிட வேண்டும் என்பது தான் முதல் நிபந்தனை.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் பூஜை விளக்கேற்றி வைக்க வேண்டும். முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு படையலிட்டு அதை காகத்துக்கு வைத்துவிட்டு பின்னர் தான் உணவு அருந்த வேண்டும். அமாவாசை விரத உணவில் பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்க்கவே கூடாது. அதேபோல், தம்பதி உடல் ரீதியான உறவுகளை இன்றைய தினத்தில் தவிர்க்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது சாலச் சிறந்தது. பொருளுதவி செய்யும் வசதி வாய்ப்பு இருந்தால் ஆடை உள்ளிட்ட தானங்களையும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறாக நாம் சில சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தால், நமது முன்னோர்கள் ஆன்மா குளிர்ந்து நம்மையும், நமது சந்ததியினரையும் நிறைவாக வாழ்த்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னோர்களை ஏன் ஆராதிக்க வேண்டும்?
நமது வாழ்வில் நடைபெறும் நல்ல பலன்கள் அனைத்தும் நம் முன்னோரின் ஆசிர்வாதம் எனக் கூறப்படுகிறது. அதுபோல் கெடு பலன்களும் முன்னோர் செய்த பாவத்தின் பலன் எனக் கூறப்படுகிறது. முன்னோர் பாவத்துக்கு அவரவர் ஜாதகப்படி பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் நம் முன்னோர் மனம் குளிர அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. அவதார புருஷர்களான கிருஷ்ணரும், ராமரும் கூட தங்களின் முன்னோரை முறையாக வழிபட்டதாலேயே புண்ணியங்களை அடைந்ததாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.
நம் முன்னோர் மறைவுக்குப் பின் அவர்களை பூஜித்த ஆராதிப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் நம் வீட்டுப் பெரியவர்கள் வாழும் காலத்தில் அவர்களை மனம் நோகாமல் பார்த்து ஆதரிப்பதும் அவசியமானது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு, குளங்களுடன் கூடிய அனைத்து கோயில்களிலுமே பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.