கேரளா: ஆர்ப்பரித்த வெள்ளம்.. கொட்டும் மழையில் கூடிய பக்தர்கள் கூட்டம்… சபரிமலையில் அமோகமாக நடந்த நிறை புத்தரிசி பூஜை!
இதற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது. இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலமாகும்.
சபரிமலை சன்னிதானத்தில் நேற்று காலை நடந்த நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நிறை புத்தரிசி பூஜை
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றி வைத்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்த பின், அபிஷேகம் முடிந்து நிறை புத்தரிசி பூஜைக்கான சடங்குகள் ஆரம்பம் ஆகின.
அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள்
இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை பகவான் ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலமாகும்.
அறநிலையத்துறை
கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜை செய்த நெற்கதிர்களை, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தன் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் அறநிலையத்துறை (தேவசம் போர்டு) தலைவர் அனந்தகோபன், சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கி இந்த நெற்கதிர்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன.
பிரசாதமாக நெற்கதிர்கள்
அதிகாலை 5:45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு நெற்கதிர்களுக்கு பூஜை நடத்தினார். அதன் பின்னர், கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டன. அதன் பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இவை முடிந்து நேற்றிரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
கொட்டும் மழையிலும் சேர்ந்த பக்தர் கூட்டம்
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்க பட்டிருந்தது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தார். சபரிமலையில் நேற்று பலத்த மழை பெய்த நிலையிலும், முக்கிய சாலைகள் அடைக்கப்பட்ட போதிலும் மாற்று வாழியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்