Guru Peyarchi 2022: இன்று குரு பெயர்ச்சி.. கும்ப ராசி டூ மீன ராசிக்கு பெயர்ச்சி! ஆலங்குடியில் குவிந்த பக்தர்கள்!
Guru Peyarchi 2022: குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம், உள்ளிட்ட ராசியினர் அவர்களின் ஜென்ம ராசிக்கு பரிகாரங்களை செய்து குரு பகவானை வழிபட்டு சென்றனர்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் அதிகாலை 4:16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாக விளங்கும் ஆபத்சகாயேஸ்வர ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா இன்று அதிகாலை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை சரியாக 4:16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் பிரவேசித்தார். அப்போது குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபெயர்ச்சி விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து குருபகவானை தரிசித்து சென்றனர். இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
3:00 மணி முதல் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம், உள்ளிட்ட ராசியினர் அவர்களின் ஜென்ம ராசிக்கு பரிகாரங்களை செய்து குரு பகவானை வழிபட்டு சென்றனர்.
வலங்கைமான் நீடாமங்கலம் பேரூராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைத்து தரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் சுகாதாரமான குடிநீர் மற்றும் 10 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுக்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகை தரும் காரணத்தினால் சிறப்பு பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலின் சிறப்புகள் பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இந்த ஆலயத்தில் இறைவனுக்கு ஏற்பட்டது இவ்வூர் இப்பெயர் வர இதுவே காரணமாகும் அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த பிரச்சனைகளை கலைந்து காத்தமையால் இந்த ஆலயத்தில் விநாயகருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த ஆலயத்தில் கலங்காமல் காத்த விநாயகர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், ஏலவார்குழலி, உமையம்மை, குரு தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சை க்கு உகந்த திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. அமைச்சர் அமுதோகர் செய்த சிவ புண்ணியத்தில் பாதி எனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது இதன் விளைவாக அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.