கோயில்களில் இருந்து அர்ச்சகர்கள் வெளியேற்றமா? - வைரல் புகைப்படம் பற்றிய Factcheck!
தமிழ்நாட்டின் கோயில்களில் தற்போது பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தகவல்களையும் படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில் பரப்பப்படும் படத்தின் உண்மைத் தன்மை என்ன?
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் நிறைவேற்றப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அர்ச்சகர் பணிகளில் முறையாகப் பயிற்சி பெற்ற 58 பேர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு, எதிர்ப்பு எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதில் சிலர் தமிழ்நாட்டின் கோயில்களில் தற்போது பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தகவல்களையும் படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
திருச்சி நாகநாதசாமி கோயில், வயலூர் கோயில் முதலான சில கோயில்களில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இதுவரை பணியில் இருந்து அர்ச்சகர்கள், சிவாச்சாரிகள் வெளியேற்றப்படுவதாகப் படம் ஒன்று வைரலானது. இந்தப் படம் குறித்த உண்மைத் தன்மையை ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பிய மாணவர்களுக்கு ஆகம விதிகளைக் கற்றுக் கொடுக்க முயன்றதற்காக சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட முதியவரான அர்ச்சகர் அவர் என்றும், அதுகுறித்த செய்தியை தி வயர் தளத்திற்காகத் தான் எழுதியதாகவும் கவிதா முரளிதரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த டுவீட்டில் உள்ள புகைப்படம் 3 வருடங்களுக்கு முன்பு வெளியான என் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பிய மாணவர்களுக்கு ஆகம விதிகளை சொல்லி தர முன் வந்ததால் சனாதனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அவர்.https://t.co/MhUcPXeiBO pic.twitter.com/8MXmgKo6us
— Kavitha Muralidharan (@kavithamurali) August 16, 2021
அவர் எழுதியிருந்த கட்டுரையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதி மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன் தற்போது வைரலாகி வரும் படத்தைப் பற்றிக் கூறியுள்ளார். “பூஜைகளை நடத்துவதற்காகத் தமிழ் வழி, சமஸ்கிருத ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் பயன்படுத்தும் ஆகம வழி ஆகிய இரு வழிகள் இருக்கின்றன. தமிழ் வழியிலான கல்வியைப் பெறுவது எங்களுக்கு சவாலாக இல்லை. எனினும், ஆகம வழியில் கற்றுக் கொள்வதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஆகம விதிகளை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதைப் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்ப்பதோடு, எங்களுக்குக் கற்றுத் தர முன்வந்த 90 வயது பெரியவரையும் தாக்கியுள்ளனர். எங்களுக்கு ஆகம விதிகளைக் கற்றுத் தரக் கூடாது என அர்ச்சகர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதி மாணவர் சங்கத்தைச் சேர்ந்தோர் அந்த முதியவருடன் எடுத்துக் கொண்ட படமே தற்போது அதற்கு நேரெதிர் பொருளில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். கோயில்களில் யாரும் பணியை இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை” என்று கூறியுள்ளார்.