Birthday Rasi Natchathiram: இந்த நட்சத்திரத்தில் பிறந்தநாள் வந்தால் என்ன நடக்கும்? ஜோதிடரின் சிறப்பு கணிப்பு
பிறந்த நட்சத்திர நாளில்தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
பிறந்த நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் !!!
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே! நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்போம் இப்படியான சூழ்நிலையில் வருடா வருடம் ஆங்கில தேதியில் உங்கள் பிறந்த நாள் வரும் இது மாதிரியான சந்தர்ப்பத்தில் ஆங்கில தேதியில் வரும் பிறந்த நாளை கொண்டாடுவதா? அல்லது பிறக்கும் போது இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நட்சத்திர நாளை கொண்டாடுவதா ? என்ற குழப்பம் பெரும்பாலானோருக்கு உண்டு .
இதற்கான விடை ஒரு மனிதன் பரிபூரணமாக அவனுடைய ஆயுசு நாட்களில் சந்திரனின் சுழற்சியை கணக்கிட வேண்டுமானால் அதற்குப் பிறந்த நட்சத்திரம்தான் உறுதுணை புரிய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவர் கடக ராசியில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நட்சத்திரம் ஆயில்யம் அவர் பிறந்த ஆங்கில தேதி மே மாதம் 12 என்று எடுத்துக் கொள்வோம். இப்படியான சூழ்நிலையில் அந்தக் குழந்தைக்கு வருடா வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகிறோம் ஆனால் உண்மையில் அந்தக் குழந்தை ஒரு வருடத்தை கடக்க வேண்டுமானால் அந்தக் குழந்தை பிறந்த நட்சத்திரத்தில் இருந்து அடுத்த வருடம் அதே தமிழ் மாதத்தில் வரும் நட்சத்திரத்தில் தான் முடிவடைகிறது.
நட்சத்திரம் என்பது எவ்வளவு முக்கியம்?
சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டதுதான் நட்சத்திரம் 12 ராசி கட்டத்தை சந்திரன் சுற்றி வருவதற்கு 28 நாட்கள் அல்லது 29 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதே கணிதம் தான் வானத்தில் சந்திரனும் பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்கிறது. அப்படியானால் ஒவ்வொரு ராசியில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தை சந்திரன் கடக்கின்ற பொழுது அதற்கான தன்மைகளும் சுபாவங்களும் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால். அந்த நட்சத்திரம் தான் அந்தக் குழந்தையின் உயிர் நாடி.
அந்த நட்சத்திரத்தை வைத்து தான் அந்த குழந்தைக்கு குரு பலன் சனி பகவானின் பலம் ராகு கேதுவின் சஞ்சாரம் என்று அனைத்தையும் கணிக்க முடியும். ஒரு குழந்தை கடக ராசியில் பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால் அந்த ராசியில் இருந்து குரு எத்தனையாவது ராசியில் அமர்ந்திருக்கிறதோ, அந்த ராசியில் நான்காம் பாவகம் தொடர்பான பலன்கள் நடைபெறும் . ஆனால் அவை அவரவர் பண பலத்திற்கு, குடும்ப வசதிக்கு ஏற்றார் போல் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு குழந்தை ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் அந்த நட்சத்திரத்திற்கு நான்காம் பாவகத்தில் துலாம் ராசியில் குரு அமர்ந்திருந்தால் நான்காம் வீட்டில் குரு பிரவேசிக்கும் காலத்தில் புதியதாக வீடு கட்டவோ அல்லது வாகனம் வாங்கவோ முயற்சி செய்தால் அது நடைபெறும்.
அதேபோன்று இடம் மாற்றம் என்பது நிச்சயமாக உண்டாகும். இது அனைத்து கடக ராசிக்கும் பொருந்துமா என்றால் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் இடம் மாற்றத்திற்கு உள்ளாகி தீர வேண்டும் ஒரு வேலை அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு சுற்றுலாவுக்காவது குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டியது வரலாம். இப்படியான சூழ்நிலையில் ஒருவருடைய நட்சத்திரம் வேலை செய்யும் விதத்தை நாம் கண்டுபிடிக்கலாம்.
நட்சத்திரத்தை வைத்து மற்ற கிரகங்களின் பலன்களை அறிவது போல ஒவ்வொரு வருடமும் அதே மாதத்தில் வரக்கூடிய சொந்த நட்சத்திரத்தில் அந்த குழந்தை வளர்ச்சி பெறுகிறது. அந்த வளர்ச்சியில் தான் அந்த குழந்தையின் அறிவாற்றல் சிந்தனை ஆற்றல் சுபாவத்தின் வெளிப்பாடு அத்தனையும் வளரும். நாம் நாட்களை நம்முடைய கணக்கிற்காக எடுத்துக் கொள்கிறோமே தவிர வேறொன்றுக்கும் அல்ல. ஆகையால் ஒருவருடைய பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவருடைய பிறந்தநாள் கணக்கிட வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மையாக இருக்கலாம். ஆனால் நட்சத்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் ஆங்கில நாட்களை கணக்கிற்காக பின்பற்றலாம் அது ஒன்றும் தவறு கிடையாது.