Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
சுக்கிர தசை என்று நீங்கள் வாசிக்கும்போதே வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம், முன்னேற்றம், செல்வ செழிப்பு, பணம், பதவி என்று அனைத்தையும் சுக்கிரன் தருவார் என்று நீங்கள் எண்ணி இருப்பீர்கள்.
சுக்கிர தசை தரும் பலன்கள் :
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே சுக்கிர தசை என்று நீங்கள் வாசிக்கும்போதே வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம், முன்னேற்றம், செல்வ செழிப்பு, பணம், பதவி என்று அனைத்தையும் சுக்கிரன் தருவார் என்று நீங்கள் எண்ணி இருந்தீர்கள் என்றால் அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் சுக்கிரன் அவற்றை மட்டும் தருவதில்லை எதிர்மறையான சில பலன்களையும் கூட தருவார். அது எந்த லக்னத்திற்கு எந்த புத்திக்கு என்பதை பொறுத்து மாறுபடும் வாருங்கள் சுக்கிர தசையில் 9 புத்திகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.
சுக்கிர புத்தி (1200 நாட்கள் ) :
ஏராளமாக செல்வம் சேரும். நவரத்தின ஆபரண சேர்க்கை ஏற்படும். வாழ்க்கையில் நாளுக்கு நாள் வசதிகள் பெருகும். மேலான பொருள் சேரும். சுக்கிர நீச்சம் பெற்று அமர்ந்தால் நன்மையான பலன்களை விட தீமையான பலன்கள் அதிகமாக நடைபெறும்.
சூரிய புத்தி (360 நாட்கள் ) :
கையில் உள்ள பொருள் விரயமாகும். செல்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். கடுமையான வியாதிகளால் பாதிப்பு உண்டாகும். வழக்கு விவகாரங்களில் பாதகமான போக்கு காணப்படும். சூரியனுடன் சுப கிரகங்கள் சேர்ந்திருந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும்.
சந்திர புத்தி (600 நாட்கள் ) :
எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். மனைவி மூலமாக பகை வந்து சேரும். குடும்பத்தில் உள்ள பெண்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சந்திரன் நீசம் பெற்று அமர்ந்தால் வருமானம் பாதிக்கப்படும். கடன் தொல்லை கொடுக்கும்.
செவ்வாய்புத்தி (420 நாட்கள் ) :
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களையும் வாங்க முடியும். சில காரியங்கள் பெண்களால் தடைபட்டு நிற்கும். கடவுள் பக்தி அதிகமாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிப்பு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்க ஏற்படும்.
ராகு புத்தி (1080 நாட்கள் ) :
ஞான மார்க்கங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். மருந்து மாத்திரைகள் விஷமாகி அவற்றால் பாதிப்பு உண்டாகும். ராகு 5,9 அல்லது 11 ஆம் வீட்டில் அமர்ந்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத லாபங்கள் கிட்டும் .
குரு புத்தி (960 நாட்கள் ):
தன, தானிய லாபம் கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். அரசாங்க நன்மை கிட்டும். வருமானமும் பெருகும். செலவும் அதிகமாகும். குரு 6,8 அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்தால் பொருள்கள் களவு போகும். நெருப்பால் ஆபத்து உண்டாகும்.
சனி புத்தி (1140 நாட்கள் ):
கால்கள் கைகளில் நோய் ஏற்பட்டு குணமாகும். உணவை கண்டால் வெறுப்பாக இருக்கும்.பொருளாதார நெருக்கடி ஏற்படும்.மனதில் கவலைகள் அதிகமாகும்.சுக்கிரன் வீட்டில் சனியும் சனி வீட்டில் சுக்கிரனும் அமர்ந்தால் அரசாங்கத்தின் மூலமாக ஆதாயம் கிட்டும்.
புதன் புத்தி (1020 நாட்கள்)
நல்ல மனைவி அமைவாள். புத்திர பாக்கியம் கிட்டும்.வருமானம் பெருகும். வீடு,நிலம்,பொன் ஆபரணங்கள் புது வாகனம் போன்றவை சேரும். இசைத் துறையில் ஆர்வம் உண்டாகும். சிவப்பு நிற மனிதனால் பல வகையான ஆதாயங்கள் கிட்டும். புதன் 6, 8 அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்தால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். முற்பாதியில் சௌக்கியமும் பிற்பாதியில் நஷ்டங்களும் உண்டாகும்.
கேது புத்தி (420 நாட்கள்)
மிருகங்களால் ஆபத்து உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். குடும்பத்தில் நிம்மதி இராது. வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். கேது ஒன்று நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் அமர்ந்தால் அரசாங்க நன்மை கிட்டும். எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ள முடியும். தன தானிய லாபம் கிட்டும்.