விருதுநகர் விவசாயிகளே.. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நெருங்குது - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
பயிர்களுக்கான காப்பீடை கடைசி நேர தாமதத்தினை தவிர்த்து தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆம் ஆண்டின் ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2025 என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு
வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு பாசி பயருக்கு ரூ.251- ஆகவும், உளுந்து, துவரை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.252- ஆகவும், சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491- ஆகவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319- ஆகவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136- ஆகவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160- ஆகவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473- ஆகவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314 ஆகவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122- ஆகவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.583- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573- எனவும், வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு கடைசி நாள் 15.11.2025 ஆகவும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 ஆகவும், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2025 ஆகவும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025 ஆகவும், மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 ஆகவும், மிளகாய் வெங்காயம் பயிர்களுக்கு 31.01.2026 ஆகவும், மற்றும் வாழைபயிர்களுக்கு 28.02.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, வங்கிகள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் பொது சேவை மையத்தில் கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) கடைசி நேர தாமதத்தினை தவிர்த்து தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.





















