கண்ணமங்கலம் அருகே பூப்பெய்த தென்னைக்கு சிறப்பு பூஜை: கிராம மக்கள் விநோத சடங்கு!
கண்ணமங்கலம் அருகே விவசாய நிலத்தில் முதல் முறையாக பூப்பெய்த தென்னைக்கு தன் பிள்ளையாக கருதி புட்டு சுற்றி விழா கொண்டாடிய விவசாயி மற்றும் கிராம மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ஜீனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (45) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வளர்ந்துள்ள தென்னை மரத்தில் முதல் முறையாக தேங்காய்கள் காய்த்துள்ளது இதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதி கிராம மக்கள் மற்றும் ராஜேந்திரனின் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இது குறித்து விவசாயி ராஜேந்திரனிடம் பேசுகையில்;
அந்த காலத்தில் ஒரு பழமொழி உண்டு "தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு" என்ற பழமொழி பிரசித்தி பெற்றது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்னங்கன்றுகளை எங்கள் பிள்ளைகளாகவே பாவித்து வளர்த்து வருகிறோம். நம் வீட்டுப் பெண் குழந்தைகள் வளர்ந்து பூப்படைந்தால் அந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகிறோம்.மேலும் அதைப்போலவேதான் கிராமங்களில் தென்னை மரங்கள் முதல் பாளை விட்டாதும் அதை நாங்கள் பூஜை, செய்து விருந்துடன் கொண்டாடுகிறோம்.ஒரு வீட்டருகே ஒன்றுக்கு மேற்பட்ட தென்னைகள் தோப்பாக இருந்தாலும், முதல் தென்னையில் முதல் பாளைக்குத்தான் இந்த பூப்பினிதல் மரியாதையெல்லாம்.தென்னையில் பாளை வெளியேறிவிட்டாலே பூஜைக்கான ஏற்பாடுகளில் நாங்கள் இறங்கி செய்து விடுவோம்.
அப்போது நாங்கள் பூஜைக்கு தேதி குறிப்பதற்குள் தென்னையில் இருந்து பாளை வெடித்துவிடும். அதன் பிறகு நாங்கள் நகர்ப்புற பகுதிக்கு சென்று கடைகளில் எங்களுடைய பெண்பிள்ளைக்கு புது சேலை பார்த்து ,பார்த்து வாங்குவது போல வாங்கும் அதுமட்டுமின்றி வளையல் போன்றவற்றை வாங்கிவந்து நல்ல நாள் பார்த்து தென்னைமரத்து பாளைக்கு பூஜைகள் நடத்தப்படும். பாளை விட்ட தென்னை மரத்தில் நீராட்டி புது சேலை உடுத்தி, மஞ்சள் மூலம் காது, மூக்கு, கழுத்து போன்ற உருவங்களை தென்னையில் உருவாக்கி அதிற்கு நகைகள் அணிவித்து, மஞ்சள், குங்குமம், மலர்களிட்டு அர்ச்சனைகள் செய்து, மற்றும் பெண்பிள்ளைக்கு புட்டு சுற்றுவது போல் தென்னைக்கும் புட்டு சுற்றி பூஜை நடத்தினோம்.
மேலும் பூஜை முடிந்தவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்களை வீட்டுக்கு அழைத்து சென்று, கிடா வெட்டி விருந்து படைத்து உண்டு மகிழ்வோம். சிலர் கோழி அடித்து விருந்து வைப்பார்கள். பாளை பூஜை விருந்துக்கு வருபவர்களில் விருப்பம் உள்ள சிலர் மொய் வைத்து செல்வதும் வழக்கம். மனித உயிர்களை மையப்படுத்தி வீடுகளில் நடைபெறும் வைபவங்களைப் போலவே, தென்னை முதல் பாளை விடும் நிகழ்வையும் இங்கே விசேஷமாகக் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்தனர்.மேலும் இயற்கையுடன் நெருங்கி, இயற்கையை வணங்கிடும் வாழ்க்கை கிராம மக்களிடம் இன்னும் நிலைத்திருக்கிறது. இயற்கையை காப்பதற்கான வழிகாட்டுதலை தமிழர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.