தீபாவளிக்குள் வழங்க வேண்டும்: பேரவை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியது எதற்காக?
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சர்க்கரை கழகம் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 51-வது பேரவை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 51-வது பேரவை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சர்க்கரை கழகம் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 51-வது பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி தலைமை வகித்தார். ஆலையின் தலைமை நிர்வாகி ராமன் வரவேற்றார். தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைவருமான எம்.ஆர்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தீபாவளிக்குள் ஊக்கத்தொகை
கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். குறிப்பாக, கரும்புக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கரும்பு வெட்டுக்கூலி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அந்தச் செலவை அரசு ஏற்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
40 ஆண்டுகால இயந்திரங்களுக்கு மாற்று
குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பழைய இயந்திரங்கள் பல இன்னும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை மாற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இயந்திரங்களை நிறுவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலையில் இணை மின் உற்பத்திக்காக பங்குத்தொகை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய பாண்டு பத்திரங்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். பயன்பாடின்றி உள்ள கனரக வாகனங்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஆலையின் நிதியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வெல்லம் உற்பத்தி தொடங்க வேண்டும்
வெல்லத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆலையில் வெல்லம் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வெல்லம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தனர்.
மேலும், 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலையில் தற்போது சுமார் 55 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்களைப் பயன்படுத்தி குளிரூட்டும் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பூக்கள், பழங்களை பதப்படுத்தும் கிடங்குகளை உருவாக்கி வாடகைக்கு விடுவதன் மூலம் ஆலையின் வருவாயை அதிகரிக்கலாம் என்றும் கூறினர்.
அதோடு மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்தி மாவு தயாரிக்கும் ஆலை மற்றும் மக்காச்சோளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.28.13 கோடி நஷ்டம்
கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண்மை இயக்குநர் எம்.ஆர்.கண்ணன் பேசுகையில், கடந்த அரவைப் பருவத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 1.29 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இதன் மூலம் 10,261 மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டை விட இது 3,090 மெட்ரிக் டன் அதிகமாகும் என்றார்.
2026–27-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் சுமார் 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்து, 10,400 மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரவை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
14,500 ஏக்கர் கரும்பு சாகுபடி இலக்கு
2026–27 நடவுப் பருவத்தில் சுமார் 14,500 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிக்க ஆலை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 14 கரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், 2025–26 நிதியாண்டில் ஆலையின் நஷ்டம் ரூ.28.13 கோடியாக உள்ளது. 2024–25-ல் இந்த நஷ்டம் ரூ.37.87 கோடியாக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட அரவைத் திறனைவிட குறைவாக கரும்பு அரவை செய்தது மற்றும் சர்க்கரை கட்டுமானம் குறைந்தது ஆகியவை நஷ்டத்துக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்தவும், கடன்களை மறுசீரமைத்து ஆலையின் நிதிநிலையை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கூட்டத்தில் ஏராளமான கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















