கரும்பில் கருப்புத்துணி, கையில் மண்சட்டி - மயிலாடுதுறை கரும்பு விவசாயிகள் போராட்டம்.
ஆற்றில் கரும்புகளை வீசி எறிந்து, கையில் நாமமிட்ட சட்டி ஏந்தி, சட்டிக்குள் மனுவை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்தி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. அதில் பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தும் செங்கரும்பை சேர்த்து வழங்குவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. 2020 -ஆம் ஆண்டு முழு கரும்பை அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழங்கியது. இதேபோல் 2021 -ஆம் ஆண்டு திமுக அரசும் முழு கரும்பை பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்கியது.

இதன் காரணமாக கரும்பு விவசாயிகள் இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 500 ஏக்கருக்கு மேல் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும், மாண்டஸ் புயலில் வீசிய காற்று காரணமாக விழுந்த கரும்புகளை சீர் செய்ய கூடுதல் செலவு செய்துள்ள விவசாயிகள் தமிழக அரசின் இந்த அறிவிப்பால் கரும்பிற்கு போதிய விலை கிடைக்காது என்று கலக்கமடைந்துள்ளனர்.

மேலும் பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரும்பில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள், கரும்புகளை கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து கரும்பை ஆற்றில் வீசி எரிந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் மண்சட்டி ஏந்தி, சட்டியில் நாமமிட்டு அதனுள் கோரிக்கை மனுவை வைத்து கோஷமிட்டபடி ஊர்வலம் ஆக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். தமிழக அரசின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு கொள்முதல் செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிதா தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சத்துணவில் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது பணிபுரியும் சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்தல் வேண்டும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், உதவியாளர் ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், ஓய்வூதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் 6850 வழங்க வேண்டும், சத்துணவு உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், உதவியாளர், சமையலர் ஐந்து ஆண்டுகள் பணி முடித்திருந்தால் அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்ப பதிவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அனைத்து தொடர்ந்து உண்ணாவிரட்டத்தில் ஈடுபட்டனர்.






















