விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் - மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படுவதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் அது மட்டும் இன்றி மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் திறக்கப்பட்ட காவிரி நீர் என தண்ணீர் கை கொடுத்ததன் விளைவாக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதம் ஆனது.
அதற்கு அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகை எட்டாயிரம் ரூபாயும் வழங்கியுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.20 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது. மேலும் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Chilli Paneer Recipe : சில்லி பன்னீர் ரெசிப்பி.. ஈஸியா ப்ரோட்டீன் கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க..
அறுவடை செய்யும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு, படிப்படியாக அனைத்துப் பகுதிகளில் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் சார்பில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.
அவ்வகையில் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் மாத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கோ-50 ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக 1,900 ரூபாயிக்கு, குறைந்தபட்ச விலையாக 1,800 ரூபாயிக்கும், சராசரியாக விலையாக 1,860 ரூபாயிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று-இறக்கு கூலி போன்ற செலவினங்களும், கால விரயமும் தவிர்க்கப்படுவதாலும், இ-நாம் திட்டத்தில் கூடுதல் விலைக்கு மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்படுவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழாவில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து நெல் கொள்முதல் பணியை தொடக்கி வைத்தார்.