(Source: ECI/ABP News/ABP Majha)
குறுவை தொகுப்பில் பாரபட்சம் வேண்டாமே? - ஆட்கள் வைத்து நடவு செய்யும் விவசாயிகள் வலியுறுத்தல்
வருண பகவான் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் காட்டூர் பகுதியில் குறுவை சாகுபடிக்காக பெண் தொழிலாளிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்: வருண பகவான் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் காட்டூர் பகுதியில் குறுவை சாகுபடிக்காக பெண் தொழிலாளிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எந்திர நடவு மட்டுமின்றி, ஆட்கள் நடவுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
வருண பகவான் கருணை கிட்டும்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சையில் குறுவை சாகுபடி பணிகளை துவக்கலாமா? வேண்டாமா என்ற மனநிலையில் விவசாயிகள் இருந்து வந்தனர். இந்நிலையில் வருண பகவான் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம், டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு விண்ணப்பம்
இவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ள குறுவை சாகுபடி விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தொகுப்புகள் வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆனால் ஆழ்துளை கிணறு மூலம் சுமார் 50 சதவீத விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை செய்து, தற்போது பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளன. பின்பட்ட குறுவையிலும் பெரும்பாலான விவசாயிகள் விதை விட்டு சாகுபடியை தொடங்கி விட்டனர். இதற்கிடையில் குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 1 லட்சம் ஏக்கருக்கு 2 ஆயிரம் டன் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மத்தியில் அதிருப்தி
இனிமேல் நெல் விதை கொடுப்பதால் எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்கள் மூலம் செய்யப்படும் நடவுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் பின்னேற்பு மானியம் கிடையாது என்பதும் விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. எந்திர நடவாக இருந்தாலும் சரி, ஆட்கள் மூலமான கை நடவாக இருந்தாலும் சரி நெல் உற்பத்திதான் நடக்கிறது. நெல் விளைச்சல்தான் கிடைக்கிறது. எதற்காக பாகுபாடு காட்டப்பட வேண்டும் என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
விவசாயி எத்தனை ஏக்கர் வைத்திருந்தாலும், ஒரு ஏக்கருக்கு மட்டுமே நடவு மானியம் வழங்கப்படுகிறது. தவிர, 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட கலவையை வினியோகிக்க ரூ.15 லட்சம், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்த ஏக்கருக்கு ரூ 250 வீதமும், ஜிப்சம் உரத்துக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதமும், இலை வழி உரம், சூடோமோனாஸ் உள்ளிட்டவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நுண்ணூட்டக் கலவை, உரங்களுக்கான நிதி போன்றவை தொகுப்பில் வழங்கப்படுவதால் அவையெல்லாம் தேவைப்படாத விவசாயிகளுக்கு சென்றடைகின்றன. அதேசமயம் நுண்ணூட்ட சத்தும், துத்தநாக சத்தும் தேவைப்படும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவ தில்லை என்ற அதிருப்தியும் நிலவுகிறது.
எந்திர நடவு, ஆட்கள் நடவு என பாரபட்சம் வேண்டாம்
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: மேட்டூர் அணை திறக்கப்பட்டாததால் ஆற்று பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்ய மிகவும் யோசித்து வருகின்றனர். இருப்பினும் பலர் வருண பகவான் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கையில் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர்.
ஆழ்துளை கிணறு மூலம் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்கின்றனர். எந்திர நடவு, ஆட்கள் மூலம் நடவு என பாகுபாடு பார்க்காமல் குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எப்படி செய்தாலும் நெல் உற்பத்திதானே செய்யப்படுகிறது. நம்பிக்கையுடன் களம் இறங்கும் விவசாயிகளுக்கு கரம் கொடுத்து உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.