(Source: Poll of Polls)
தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற உர பரிந்துரை
தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் ஒல்லிக்காய்களை தவிர்க்கலாம்.
தஞ்சாவூர்: தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது. ஒல்லிக்காய்கள் என்பவை காய்களின் பருமன் குறைந்து, சிறுத்து நீளமாகவும், உள்ளே பருப்பற்றும் கொட்டாங்கச்சியுடனே அல்லது வெறும் உரிமட்டையுடனே காணப்படும். சில சமயங்களில் கொட்டாங்கச்சி வெடித்து பருப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் பூசணங்களால் தாக்கப்பட்டு கருப்பாக காணப்படும். இதனை வைப்பாலை தேரைக்காய் எனவும் அழைக்கின்றனர்.
தென்னையில் ஒல்லிக்காய் உற்பத்திக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் பாரம்பரிய குணம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மற்றும் மரகத சேர்க்கை குறைபாடு போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சரிவர பராமரிக்கப்படாத தோப்புகளிலும், மானாவாரி தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகின்றது. இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுவதன் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்களை குறைத்து அதிக விளைச்சல் பெறலாம். பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லாத மரங்களில் இருந்து 12 மாதம் முதிர்ச்சி அடைந்த தென்னை நெற்றுக்களை தேர்வு செய்து அதிலிருந்து நாற்றுக்களை தயார் செய்ய வேண்டும்.
நாற்றுகளின் வயது 9 முதல் 12 மாதம். அதிக வேர்களை உடைய கன்றுகள். கன்றுகளின் கழுத்து பகுதி அதிக பருமன் உடையவை. ஐந்து முதல் ஏழு இலைகள் உடையவை. விரைவில் ஓலை பிரிப்பவை. பூச்சி நோய் தாக்கப்படாதவை. ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்த்தல்
தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் ஒல்லிக்காய்களை தவிர்க்கலாம்.
நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் தழைச்சத்து, 260 கிராம் மணி சத்து, 820 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதனை ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களின் மூலம் ஈடுகட்ட வேண்டும். மேலும் சோடியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, தாமிரம் மற்றும் போரான் போன்ற ஊட்டச்சத்துக்களும் தென்னை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனை ஈடு செய்ய தென்னைக்கான நுண்ணூட்டக் கலவைகளை வளர்ந்த தென்னைக்கு ஒரு கிலோ என்ற அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இட வேண்டும். மேலும் இயற்கை எருவாகிய மக்கிய சாணம், கம்போஸ்ட், கோழி எரு, மக்கிய ஆலை மற்றும் தென்னை நாற்கழிவுகளை இடலாம். இவை தவிர பசுந்தாள் உர பயிர்களான சணப்பு, கொளுஞ்சி கலப்பகோனியம் போன்றவற்றை தென்னையின் ஊடே விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளம் காத்திடலாம். இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் தோன்றக்கூடிய ஒல்லிக்காய்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.
மக்கிய சாண எரு அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோ. யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்போர்ட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ இவைகளுடன் ஒரு கிலோ கூடுதல் பொட்டாஷ் மற்றும் 2 கிராம் வெண்காரத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுவதன் மூலம் ஒல்லிக்காய்கள் குறைந்து விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமான கொப்பரைகள் கிடைக்கின்றன.
சில விவசாயிகள் தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடர்த்திக்கும் அதிகமாக அடிக்கடி வேர் மூலம் உட்செலுத்துவதாலும் ஒல்லிக்காய்கள் தோன்ற வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தென்னையில் மகரந்த சேர்க்கை குறைந்து ஒல்லிக்காய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேர் மூலம் மருந்து உட்செலுத்தும் போது பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி மற்றும் பூசண மருந்துகளை சரியான அடர்த்தி மற்றும் இடைவெளியில் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறாக தரமான தென்னங்கன்று, சரிவிகித பயிர் உணவு, ஒருங்கிணைந்த உரம் மேம்பாடு மற்றும் பூச்சி, நோய் மேம்பாட்டின் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்கள் உற்பத்தியை குறைத்து அதிக விளைச்சல் பெற்று, மண்வளத்தையும் காத்திடலாம்.