கேழ்வரகு சாகுபடி செய்து சிறந்த லாபம் பெறுங்கள்... விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
கேழ்வரகு இரகங்களில் கோ 9, 13, கோ (ரா) 14, கோ15 சிறந்தவை. கேழ்வரகு சாகுபடி செய்ய நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழுஉரம் இட வேண்டும்.
தஞ்சாவூர்: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தேவையில்லாத சர்க்கரை, கொழுப்பு பொருள்களை வெளியேற்ற உதவும் கேழ்வரகு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேழ்வரகு பயிரிட ஏற்ற பட்டம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம் சிறந்தது.
கேழ்வரகு இரகங்களில் கோ 9, 13, கோ (ரா) 14, கோ15 சிறந்தவை. கேழ்வரகு சாகுபடி செய்ய நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழுஉரம் இட வேண்டும். பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
நாற்றங்கால் முறையில் பயிரிட ஹெக்டருக்கு 5 கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதையளவும் தேவைப்படுகின்றன. 18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் வீதம் 15×15 செமீ. (அ) 22.5:10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை. மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டருக்கு முறையே 90:45:45 கிலோ இடவேண்டும். 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒரு ஹெக்டர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்குத் தேவையான நாற்றுக்களை 15-30 நிமிடம், வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.
விதைத்த அல்லது நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். (அ) ஒரு ஹெக்டருக்கு இரண்டு லிட்டர் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
கேழ்வரகைப் பொதுவாக பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. எனினும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப்புழுக்கள் தண்டு துளைப்பான்கள், சாறு, உறிஞ்சிகள், வேர் அசுவினி முதலிய பூச்சிகள் தாக்கலாம். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் (50% ஈசி) 200 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கவும், தண்டுத்துளைப்பான்களை கட்டுப்படுத்த தூர்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் இப்பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம்,
வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த டைமித்தோயைட் 0.03 சதவீத கலவையை வேர்ப்பகுதியில் ஊற்றவும். கேழ்வரகினை குலை நோய், செம்புள்ளி, தேமல் நோய் தாக்கலாம். குலை நோயினைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் கார்பென்டசிம் மருந்தினை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது மேன்கோசெப் 1கிலோ என்ற அளவில் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். தேமல் நோயினைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை முதலில் அகற்றவும். இந்நோய் தத்துப்பூச்சிகளால் பரவுவதால் அதைக்கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம் (500 மிலி/ஹெக்டர்) நோய் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். தெளித்த 15 நாட்களில் மறுமுறையும் தெளித்தால் நோய் முற்றிலும் கட்டுப்படும். கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.
கேழ்வரகிலுள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மையுள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமலிருக்கவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஜீரண சக்தியை அதிகமாக்கவும், இரத்தத்திலுள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. கேழ்வரகில் அதிகளவு சுண்ணாம்புச் சத்து உள்ளது. வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. இரத்தசோகை நோய் வராமல் தடுக்க கேழ்வரகிலுள்ள இரும்பு சத்து மிகவும் பயன்படுகிறது.