RR VS RCB Eliminator Highlights | ஈசாலா கப் போச்சே கதற விட்ட RR கலங்கிய விராட்
ஈசாலா கப் போச்சே கதற விட்ட RR கலங்கிய விராட்
எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் காட்மோர் தொடங்கினர். இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் நிதானமாக விளையாடினர். மூன்றாவது ஓவரில் இருந்து பவுண்டரிக் கணக்கைத் தொடங்கிய இவர்களை பெங்களூரு அணியால் எளிதில் தடுக்க முடியவில்லை. இவர்கள் கூட்டணியை பவர்ப்ளேவின் கடைசி ஓவரை வீசிய ஃபெர்குசன் கைப்பற்றினார். ஃபெர்குசன் பந்தில் காட் மோர் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை இலக்கை நோக்கி வேகமாக நகர்த்துவதில் கவனமாக செயல்பட்டார். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, அவருக்கு சஞ்சு சாம்சன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் கூட்டணியை பிரிப்பது மிகவும் கடினம் என்ற நிலையை இருவரும் ஏற்படுத்தினர். இந்நிலையில் ஆட்டத்தின் 10வது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் இழந்து வெளியேறினார். இவர் 30 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார்.
இதற்கிடையில் சாம்சனின் எளிமையான ரன் அவுட் வாய்ப்பினை கரன் சர்மா வீணடித்தார். ஆனால் 10வது ஓவரின் முதல் பந்தினை சற்று வைய்டாக வீசிய பந்தினை சஞ்சு சாம்சன் தவறவிட அதனை சரியாக பிடித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சூப்பராக ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இவர் 13 பந்தில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரேலை விராட் கோலி மற்றும் கேமரூன் க்ரீன் கூட்டணி அட்டகாசமாக ரன் அவுட் செய்தது. இதனால் ராஜஸ்தான் அணி 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாகவே இருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணி சார்பில் களமிறக்கப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் ஹெட்மயர் சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். ஏற்கனவே களத்தில் இருந்த ரியான் பிராக் அட்டகாசமாக விளையாடி பெங்களூரு அணியின் பவுலிங்கை துவம்சம் ஆக்கினார்.
கடைசி நான்கு ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி சென்னையில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பெற்றதால் நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ராஜஸ்தான் அணி வரும் 24ஆம் தேதி குவாலிஃபையர் 2 சுற்றில் ஹைதரபாத் அணியை சென்னையில் எதிர்கொள்ளவுள்ளது.