Savukku Shankar | ’’என்னை யாரும் துன்புறுத்தல’’சவுக்கு சங்கர் பகீர்! அதிரடி திருப்பம்?
’’என்னை யாரும் துன்புறுத்தல’’சவுக்கு சங்கர் பகீர்! அதிரடி திருப்பம்?
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 நாள் காவல் விசாரணை முடிவடைந்து சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தன்னை துன்புறுத்தவில்லை என சவுக்கு சங்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் பெண் காவலரை தாக்க முயன்றதாகவும், அவதூறாக பேசியதாகவும், தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் மொத்தம் 400 கிராம் கஞ்சா வைத்திருந்த காரணத்தால் கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது
இந்நிலையில் 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் நீதிபதி செங்கமலசெல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்டார். முன்னதாக காவலில் இருக்கும் போது காவல்துறையினர் தனது கையை உடைத்ததாகவும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும் சவுக்கு சங்கர் பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி முன்பு இன்று நடந்த விசாரணையின் போது, சவுக்கு சங்கர் கடந்த 2 நாள் போலீஸ் காவலில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.