Sasikala : சசிகலா ENTRY.. எடப்பாடி EXIT.. 4 சம்பவங்கள்!
அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், திமுக, அதிமுக பிரமுகர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறப்பு நிகழ்வை வைத்து அரசியல் பேசக்கூடாது என்றாலும் ஓபிஎஸ்ஸை சசிகலா சந்தித்ததும், சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காமல் சென்றதும் தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்ததாக கூறப்பட்டதும், சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.
முதலமைச்சராக பொறுப்பேற்கவிருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை உறுதியாக, தனக்கு நம்பகமாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டு சிறை சென்றார் சசிகலா. தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் பின்னர் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டார். இதற்கிடையில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கப்பட அ.ம.மு.க என்ற கட்சி உருவானது.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவில் சசிகலா சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்று பத்திரிகையாளர்கள் பலமுறை கேள்வியெழுப்பியபோது அதிமுகவில் சசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. உண்மையில், யாருக்குமே தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்து உலகறியச் செய்தவர் சசிகலாதான். எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருந்திருக்க வேண்டுமென்றால் அது சசிகலாவுக்கு தான். ஆனால், அதிமுகவில் சசிகலா சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என்ற இபிஎஸ்-ஸின் பிடிவாதம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. கடந்த ஆண்டு இபிஎஸ்-ஸின் தாயார் காலமானார்.
இந்த ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா துக்கம் விசாரிப்பதற்காக, எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடைபெறாது என்று சொல்லப்பட்டது. இதை சொன்னது அமைச்சர் ஜெயக்குமார். அத்தோடு மட்டும் நிற்கவில்லை. அதிமுகவினரை வைத்து சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்று சசிகலாவை அதிமுகவிற்குள் நுழைய விடாமல் செய்ய என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையும் செய்யப்பட்டது. இதைத்தான், தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்று போகுமிடமெல்லாம் குற்றம்சாட்டினார் மு.க.ஸ்டாலின்.
அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தார் சசிகலா. அவர் சென்றபோது மருத்துவமனையில் ஏற்கனவே இபிஎஸ்-சும் இருந்தார். அப்போதாவது சசிகலா-இபிஎஸ் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதேச்சையாக கூட இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. மதுசூதனன் உயிரிழந்த போதும் ஆறுதல் தெரிவிக்க வந்திருந்தார் சசிகலா.
அதே நேரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பலரும் அங்கே வந்திருந்தனர். சசிகலாவை அப்போதும் சந்திக்காமல் வேண்டுமென்றே தவிர்த்தார் ஈபிஎஸ். இன்று ஓபிஎஸ்-ஸின் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சென்றிருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் வந்தபோது கூட ஓபிஎஸ் உடன் இருந்த இபிஎஸ், இரங்கல் தெரிவிக்க சசிகலா வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினார். ஓபிஎஸ்ஸை சந்தித்த சசிகலா, அவரது கையைப்பிடித்து ஆறுதல் கூறியதோடு கண்ணீர்விட்டு அழவும் செய்தார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் செய்ததோடு, சசிகலாவை அதிமுகவை விட்டே நீக்க வேண்டும் என்று கூறிய ஓபிஎஸ் -ஸை சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.