Rahul Gandhi : எதிர்க்கட்சி தலைவர் மாற்றம்? ராகுலை எதிர்க்கும் I.N.D.I.A? பற்றவைக்கும் பாஜக
எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி இருக்கும் நிலையில், அவரை மாற்றுவதற்கான பேச்சு இந்தியா கூட்டணியில் ஆரம்பித்துள்ளதாக பாஜகவினர் பற்றவைத்துள்ளனர்.
2014, 2019 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த முறை 99 இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார் ராகுல்காந்தி. இந்தியா கூட்டணியினர் ஒருமனதாக ராகுல்காந்தியை தேர்வு செய்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய மாநில கட்சிகளும் உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பே இந்த கூட்டணி வெற்றி பெற்றார் யார் பிரதமராக இருப்பார்கள் என்ற விமர்சனத்தை கையில் எடுத்தனர் பாஜகவினர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருப்பார் என்று விமர்சித்தார் அமைச்சர் அமித்ஷா. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்திலும் அதே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.
டெல்லி பாஜக எம்.பி பன்சுரி ஸ்வராஜ், இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சி தலைவரை மாற்றுவதற்கான குரல் எழுந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவர்களது தனிப்பட்ட முடிவுதான் என்றும், ராகுல்காந்தியின் செயல்பாடு அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி நிறைய பேருக்கு உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரை மாற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூட்டணிக்குள் குழப்பத்தை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியே எதிர்க்கட்சி தலைவராக முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படியே லோக் சபாவில் எதிர்க்கட்சி இருக்கையில் ராகுல்காந்தி அமர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.