Annamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்
தமிழ்நாடு ஆதீனங்களை சமாஜ்வாடி எம்.பி அவமதித்து விட்டதாகவும், இதுதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடா என கேட்டு விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசால் கடந்த ஆட்சியில் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளது பெருமையான ஒன்று என பலரும் பாராட்டினர். இந்தநிலையில் சமாஜ்வாடி எம்.பி ஆர்.கே.சவுத்ரி செங்கோல் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதாவது, ‘அரசியலைப்பு தான் ஜனநாயகத்தின் அடையாளம். செங்கோல் என்பது அரசர் பயன்படுத்தும் கோல். மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு நாடு சுதந்திரம் பெற்றது. நமது நாடு அரசர்களால் ஆட்சி செய்யப்படுகிறதா அல்லது அரசியலமைப்பா. அரசியலைப்பை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்” என பேசியுள்ளார்.
அவரது கருத்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே மோதலை பற்றவைத்துள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை விமர்சிக்கும் வகையில் சமாஜ்வாடி எம்.பியின் கருத்து உள்ளதாக தமிழக பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவில், ‘தேர்தல் முடிந்து விட்டதால் இந்தியா கூட்டணி மீண்டும் நமது கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளது. சமாஜ்வாடி எம்.பியின் கருத்துதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடா? திமுக இதற்கு என்ன பதில் கொடுக்கிறது என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையிலும் ஆசீர்வாதத்திலும் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. சமாஜ்வாதி எம்.பி செங்கோல் பற்றி கேலி செய்துள்ளது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழ்நாட்டு ஆதீனங்களை அவமதிக்கும் செயல்.
ஏற்கனவே காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் என சொன்ன நிலையில், சமாஜ்வாதி எம்.பியின் கருத்தும் ஆச்சரியமானது இல்லை. இந்தியா கூட்டணியினர் தென்னிந்தியர்கள் மற்றும் நமது கலாச்சாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது” என விமர்சித்துள்ளார்.
செங்கோலை வைத்து இந்தியா கூட்டணியினரை, குறிப்பாக திமுகவினரை பாஜகவினர் ரவுண்டுகட்டி வருகின்றனர்.