Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்
அண்ணாமலையை தமிழிசை விமர்சித்த நிலையில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா தமிழிசையை கூப்பிட்டு கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பாஜக மாநில தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைமையான அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். அதே நேரத்தில் பாஜக வை சேர்ந்த கல்யாணராமன் என்பவரும் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார். பாஜகவில் தமிழிசை உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், சிலர் கோஷ்டியாக இணைந்து ஆலோசிப்பதும் டெல்லி பாஜக தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
மாநில தலைவர்கள் யாரும் தேவையின்றி பேசக் கூடாது என்றும், செய்தியாளர் சந்திப்போ, நேர்காணல்களோ ஊடகங்களுக்கு கொடுத்தால் முறைப்படி மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்த பிறகே பேச வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு நேற்று விமான மூலம் கோவை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இனி செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களிடம் பேச முடியாது என்றும் விமானத்தில் வரும் அந்த குறிப்பிட்ட இடைவெளியில் சில விஷயங்கள் நடந்துவிடுகிறது. அது தெரிவதில்லை. அதனால், பாஜக தலைவர்கள் இனி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினால், அது பாஜக அலுவலகத்தில் வைத்து மட்டுமே முறைப்படி பேட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா அந்திராவில் நடைப்பெற்று வருகிறது. அதில் பிரதமர் மோடி, அமிட்ஷா, தமிழிசை திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழைசை அமித்ஷாவிற்கு வணக்கம் வைத்த போது அமித்ஷா தமிழிசையை கூப்பிட்டு பேசினார். பாஜக மேலிடம் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் அமித்ஷா தமிழிசையை கண்டித்தாரா எனப் பேசப்பட்டுவருகிறது.