Youtuber A2D issue : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?
சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நபர்கள் யூடியூபரின் கேமராவை பிடுங்கி ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரபல யூடியூபரான நந்தா a2d என்ற சேனல் மூலம் டெக்னாலஜி தொடர்பாகவும், அது தொடர்பான மோசடி தொடர்பாகவும் நடக்க கூடிய விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் மின்னணு பொருட்கள் வாங்குவது தொடர்பாக வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த சில நபர்கள் திடீரென அவரை மறித்து கேமராவை பிடுங்கியுள்ளனர். அவர்களைதான் வீடியோ எடுப்பதாக நினைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர். நான் யாருனு தெரியுமா? நான் சொன்ன உடனே பசங்களாம் வந்துருவாங்க என்று மிரட்டி கேமராவை ஒருவர் பிடுங்கி சென்றுள்ளார். ஆட்டோவில் அமர்ந்திருந்த சிலர் கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கு வைத்து மது அருந்தி கொண்டுள்ளனர். யூடியூபர் நந்தா இந்த வீடியோவை வெளியிட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலானது.
மக்கள் அதிகம் இருக்கக் கூடிய இடத்திலேயே இப்படி மது அருந்தி கொண்டு ரகளை செய்வதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்றவர்களை போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் யூடியூபர் நந்தா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.