Nitish Kumar Plan : தேஜஸ்வியுடன் புறப்பட்ட நிதீஷ்! பரபரக்கும் டெல்லிஆட்சியில் மாற்றம்?
தேஜஸ்வியுடன் புறப்பட்ட நிதீஷ்! பரபரக்கும் டெல்லிஆட்சியில் மாற்றம்?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டதில் பங்கேற்க NDA கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரும், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவும் பீகாரில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரண்டு முக்கிய தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணித்து இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு வரை நிதிஷ் மற்றும் தேஜஸ்வி ஆகிய இருவரும் சேர்ந்து தான், பீகாரில் ஆட்சி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றைய பயணத்தின் போது, I.N.D.I.A. கூட்டணிக்கு வருவது தொடர்பாக நிதிஷ்குமாரிடம் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், தேஜஸ்வி யாதவ் தலைமயிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.