மேலும் அறிய
Thanjavur cannon: கம்பீரமாக 400 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தஞ்சாவூர் பொக்கிஷம் ராஜகோபால பீரங்கி
கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று.

ராஜகோபால பீரங்கி
தஞ்சாவூர்: 400 ஆண்டுகளாக வெட்டவெளியில், கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கன கம்பீரமாக கட்டுக்குலையாமல் உள்ள தஞ்சாவூர் பீரங்கியை பார்த்து சுற்றுலா பயணிகள் வியந்துதான் செல்கின்றனர்.
தஞ்சைக்கு சுற்றுலாவாக சுற்றுலாப் பயணிகளுக்கு தஞ்சையில் அமைந்துள்ள பீரங்கி மேடு இன்றளவும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகை இல்லை. இன்று உலகில் உள்ள பழைய பீரங்கிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள பீரங்கி உள்ள இடம்தான் தஞ்சை பீரங்கி மேடு.
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை கி.பி. 1532-இல் ஆட்சி செய்ய தொடங்கினர். இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 – 1645) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் மூன்றாவது மன்னர்.
இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். இன்றைய தஞ்சையில் உள்ள மானோஜிப்பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம் ஆகும். எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில் தஞ்சைக் கொல்லர்களின் தொழிற் திறமையால் இரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது தான் இந்த இராஜகோபால பீரங்கி என்று அழைக்கப்படும் பழமையான பீரங்கி. இதற்கு ஏன் இந்த பெயர்.

தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி, இராஜகோபால சுவாமியின் பெயரையே இந்தப் பெரும் பீரங்கிக்கு பெயராக வைத்தார் இரகுநாத நாயக்கர். தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பெரிய மேடை (சுமார் 60 அடி உயர குன்று) போல் அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது.
கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று.
பொதுவாகப் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சை பீரங்கியோ தேனிரும்புப் பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது.26 அடி நீளம் 300 எம்எம் உருட்டுருளையும் 150 எம்எம் உட்சுவர் கனமும் கொண்டது. எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.

தஞ்சை நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கிகள் வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கி 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கன கம்பீரமாக கட்டுக்குலையாமல் உள்ளது.
இந்த பீரங்கியை உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை ஒருமுறை பார்த்து நம் முன்னோர்களின் தொழில் திறமையை கண்டு மகிழ வேண்டும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement