Twitter Edit Update : “டிவிட்டரில் விரைவில் எடிட் பட்டன் ?” எப்படித் தெரியுமா? வந்தாச்சு புது அப்டேட்..
”அட என்னதான் காரணம்? ஏன் ஒரு எடிட் பட்டனை உருவாக்க இவ்வளவு அடம்பிடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ..”
இன்று பலரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களுள் ஒன்று ட்விட்டர். குறுந்தகவல்களை மட்டுமே ஷேர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ட்விட்டர். இன்றைக்கு கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. போட்டி உலகில் பயனாளர்களை தன்வசப்படுத்த ட்விட்டர் அவ்வபோது சில வசதிகளை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் எடிட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ட்விட்டர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் எடிட் பட்டனுக்கான வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறோம் “ என பதிவிட்டுள்ளது.
வெகுகாலமாக பயனாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு வசதியல்லவா... அதனால்தான் ட்வீட் பதிவிட்ட 13 மணி நேரத்திற்குள் 90,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ட்வீட் பதிவிட்ட நாள் என்னவோ ஏப்ரல் 1 , அதனால் ட்விட்டர் முட்டாள்கள் தினத்தை கொண்டாடி, வேடிக்கை செய்கிறதோ என்றும் சிலர் விவாதிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் ட்விட்டரை தொடர்புக்கொண்டு கேட்ட பொழுது “ நாங்கள் எதையும் இப்போது உறுதிப்படுத்த முடியாது... தற்போது பதிவிட்ட ட்வீட்டை எதிர்காலத்தில் நாங்கள் மாற்றவும் செய்யலாம் “ என கூறியிருக்கிறது. தற்போதைய ட்வீட்டை எடிட் செய்வது குறித்த சூசகமான பதிலா அல்லது ட்வீட் வேடிக்கையாக போடப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பயனாளர்கள் நிச்சயம் எடிட் பட்டன் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
we are working on an edit button
— Twitter (@Twitter) April 1, 2022
2006 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கப்பட்ட காலம் முதலே ஒரு எடிட் பட்டனை வையுங்களேன் என்பதுதான் பலரின் கோரிக்கையாக உள்ளது. சாதாரண பயனாளர்கள் மட்டுமல்லது பல நாடுகளின் முக்கிய பிரபலங்களும் இதனை வலியுறுத்த தொடங்கிவிட்டனர். 2019 இல் டிவிட்டரின் தயாரிப்பு நிறுவனர் Kayvon Beykpour “ நாங்கள் ஒரு எடிட் வசதியை உருவாக்க வேண்டும் நினைப்பதாக கூறினார்.
ஆனால் ஜனவரி 2020 இல், ட்விட்டர் இணை நிறுவனரும் .முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி வயர்டிடம் ட்விட்டர் ஒருபோது தனது பயனாளர்களுக்கான எடிட் பட்டனை உருவாக்காது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அட என்னதான் காரணம்? ஏன் ஒரு எடிட் பட்டனை உருவாக்க இவ்வளவு அடம்பிடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ..”நீங்கள் பேசும் பொழுது அந்த வார்த்தைகளை திருத்த முடியாதல்லவா.. அப்படித்தான் ஒரு உரையை நீங்கள் பதிவிட்ட பிறகு அதனை திருத்த முடியாது “ என பதிலளித்தது ட்விட்டர் நிர்வாகம் . இந்த சூழலில் டிவிட்டர் நிறுவனம் பதிவிட்ட தற்போதைய ட்வீட் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.