Solar Eclipse : இந்த ஆண்டின் இரண்டாம் சூரியகிரகணம் எப்படி பார்க்கலாம்? எந்த நேரத்தில் பார்க்கலாம்?
உலக அளவில் பகுதி சூரிய கிரகணம் 14:19 (IST)- 18:32 (IST) மணிக்கு நிகழும். உலகின் எப்பகுதியிலும் முழு சந்திரகிரகணம் நிகழாது ரஷ்ய நாட்டின் மத்தியப்பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.
சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.
பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை (சுமார் 5 டிகிரி சாய்கோணத்தில் சுற்றிவரும்). எனவே ஒவ்வொரு சுற்றின் போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது மட்டும் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
பூமியிலிருந்து காணும் போது சூரியனும் நிலவும் ஒரே மாதிரி காணப்படுகிறது. சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகவும், 400 மடங்கு தொலைவில் இருப்பதாலும், பூமியிலிருந்து காணும்போது சூரியனும் நிலவும் ஒரே அளவாக இருப்பது போலக் காணப்படுகிறது.
பூமியை நிலவு சுற்றும்பாதை எக்லிப்டிக் தளத்திற்கு சாய்கோணத்தில் இல்லாமல் இருந்திருந்தால் ஒவ்வொரு அமாவாசையின் போதும் சூரிய கிரகணம் நிகழ்ந்திருக்கும். சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இருபகுதிகளைக் கொண்டது. ஒன்று முழுநிழல் பகுதி மற்றறொன்று புறநிழல் பகுதி.
முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்து விடும். இது முழு சூரியகிரணமாகும். புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும். எனவே, புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒருபகுதியை மட்டும் காண்பர். மீதப்பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரியகிரகணமாகும். ஒரு பகுதி சூரியகிரகணம் வரும் செவ்வாய் (25-10-2022) அன்று நிகழவுள்ளது.
ரஷ்யாவின் தெற்குப்பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடியும். உலகின் எப்பகுதியிலும் முழு சந்திரகிரகணம் நிகழாது ரஷ்ய நாட்டின் மத்தியப்பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.
சென்னையில் இந்திய நேரப்படி 17:14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். 17:44 க்கெல்லாம் முடிந்து விடும். சூரியன் அன்று 17:44 மணிக்கு மறையும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இதுவும் சூரியன் மறைகையில்தான். எனவே மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும் முன் இந்நிகழ்வு நடக்கிறது. கிரகணம் ஆரம்பிக்கும்போது தொடுவானிலிருந்து சுமார் 7 டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும். இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகர்களில் இந்த நிகழ்வைக் காண இயலும்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் ஜூன் 21, 2021-ஆம் தேதியன்று கங்கண சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2-இல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரியகிரகணத்தைக் காணலாம்.இந்த சூரிய கிரகணத்தின் போது தமிழகத்தில் 8% சூரியன் மட்டுமே மறையும் அதே சமயம் மாலை நேரத்தில் நிக்ழ இருப்பதால் மக்கள் இதனை பார்வையிட பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அப்படி மக்கள் பார்க்க விரும்பினால் வெல்டர் கிளாஸ் (welder glass) அல்லது தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவுறுத்தியுள்ளது.