ஸ்பேம் கால் தொந்தரவு தாங்க முடியலையா? இனி கவலையை விடுங்க! ட்ராய் போட்ட அதிரடி உத்தரவுகள்!
அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஸ்பேம் கால் குறித்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தற்சமயத்தில் செல்போன் பயன்படுத்தாதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடு நாட்டில் அதிகரித்துவிட்டது. எதற்கெடுத்தாலும் செல்போனை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். முன்பெல்லாம் தெரியாத ஒரு நம்பரில் இருந்து கால் வருவது அரிதிலும் அரிதாக இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லோன் வேண்டுமா, இன்சூரன்ஸ் வேண்டுமா? என போட்டு நச்சரிக்கின்றனர். ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கும்போதுதான் தொந்தரவுக்கு எல்லையே இருக்காது. இதனால் தான் ட்ராய் தற்போது அதிரடி உத்தரவுகளை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த தொந்தரவுகள் குறித்து ட்ராய்க்கு அடிக்கடி புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது.
இதையடுத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் போட்ட உத்தரவுகளில் “முன்பே பதிவு செய்யப்படாத, பதிவு செய்யப்பட்ட, கணினியால் உருவாக்கப்பட்ட அனுப்புநர்கள் விளம்பர நோக்கத்துடன் கால் செய்யும் அனைத்து கால்களையும் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.
இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்பேம் கால்கள் குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனுப்புநரின் அனைத்து தொலைத்தொடர்பு விநியோகங்களையும் 2 ஆண்டுகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட அனுப்புநரை 2 ஆண்டுகளுக்கு பிளாக் லிஸ்ட்டில் வைக்க வேண்டும்.
இந்த பிளாக் லிஸ்ட் குறித்த விவரங்களை 24 மணிநேரத்தைல் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அடுத்த 24 மணிநேரத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அந்த குறிப்பிட்ட ஸ்பேம் கால் நம்பர்களை பிளாக் லிஸ்ட்டில் வைக்க வேண்டும்.
இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு செல்லும் ஸ்பேம் கால்கள் குறையும். தொந்தரவுகளும் குறையு. இதை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனகளும் கடைபிடிக்க வேண்டும்” என ட்ராய் தெரிவித்துள்ளது.