WWE Event In India: WWE சண்டை பிடிக்குமா? இந்தியாவில் நேரடியாக காண ஒரு வாய்ப்பு..எப்போன்னு தெரியுமா?
உலக அளவில் பிரபலமான டபள்யூடபள்யூஇ (WWE) எனப்படும் பொழுதுபோக்கு சண்டையை, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான டபள்யூடபள்யூஇ (WWE) எனப்படும் பொழுதுபோக்கு சண்டையை, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
பொழுதுபோக்கு சண்டை:
அமெரிக்காவை மையப்படுத்தி தொடங்கப்பட்டு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள டபள்யூடபள்யூஇ (WWE) எனப்படும் பொழுதுபோக்கு சண்டை, இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் வரும் ராக், அண்டர்டேக்கர், ஜான் சீனா, பிக்ஷோ, படிஷ்டா, காளி மற்றும் டிர்பிள்எச் என பலரும் இந்த விளையாட்டுக்கான அடையாளங்களாக உள்ளனர். பள்ளி படிக்கும் குழந்தைகள் முதற்கொண்டு தற்போது தந்தைகளாக மாறியுள்ள 90-ஸ் கிட்ஸ்கள் வரையில் இந்த சண்டையானது மிகவும் பிரபலம். நண்பர்களிடையே, வரும் சண்டையின்போது பல பிரபலங்களின் ”ஸ்மேக்கை” போடாத இளைஞர்களே கிடையாது. அண்மையில் நடந்த முடிந்த வ்ரெஸ்ட்ல் மேனியா-38 போட்டி, இந்தியாவில் இருந்து 5 கோடி பார்வையாளர்களை பெற்றது. அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் WWE பொழுதுபோக்கு சண்டை:
அந்த வகையில் இந்தியாவில் பொழுது போக்கு சண்டையை நேரடியாக நடத்த WWE நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக MoffettNathanson கருத்தரங்கில் பேசிய உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான நிக் கான், வரும் செப்டம்பர் மாதத்தில் WWE பொழுதுபோக்கு சண்டை நேரடி நிகழ்வை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, “நாங்கள் இந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். செப்டம்பரில் இந்தியாவில் இருந்து ஒரு நேரடி நிகழ்வை செய்யப்போகிறோம். அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிகழ்ச்சி. இதுதான் இன்றைய முக்கிய அறிவிப்பு. இதனால் நாங்கள் உற்சாகமாக உள்ளோம்” என்றார். அதேநேரம், இந்த சண்டை நேரடியாக இந்தியாவிலேயே நடைபெறுமா அல்லது ஒளிபரப்பப்படுமா என்பது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. செப்டம்பர் 2ம் தேதி இந்த சண்டை நடைபெறும் என கூறப்படும் நிலையில், அதற்கு முந்தைய நாளில் ஸ்மேக்-டவுன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள் என்ன?
நேரடியாக நிகழ்வை நடத்த முடிவு செய்தால், அடுத்தடுத்து இரண்டு ஷோக்களை நடத்த வேண்டியிருக்கும். இதற்காக பல முக்கிய நட்சத்திர வீரர்களும் இந்தியாவிற்கு வருவர். ஆனால், நேரடி ஒளிபரப்பு என முடிவு செய்யப்பட்டால், ரசிகர்களை குஷிப்படுத்த குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே இந்தியா வர வாய்ப்பு இருக்கும். அதேநேரம், நேரலை நிகழ்வை நடத்த உள்ள மாநிலம் தொடர்பான விவரங்களும், இதுவரை வெளியிடப்படவில்லை. ஒருவேளை இந்த நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டால், 2017ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் முதல்முறையாக WWE பொழுதுபோக்கு சண்டை நடைபெற உள்ளது.