WTC Final | IND vs NZ: ”மூணு மேச்சா வெச்சு இருக்கனும்” : இந்தியாவுக்கு பின்னடைவு எனச்சொல்லும் யுவராஜ் சிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணிக்கு சற்று பின்னடைவான சூழல் நிலவுவதாக யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஒரு டெஸ்டில் முடிவு செய்யப்படுகிறது, அது இந்திய அணிக்கு சற்று பின்னடைவுதான். இறுதி போட்டியை மூன்று போட்டிகளாக வைத்து நடத்தி இருக்கலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜூன் 3-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணிக்கு, தங்களை தயார்படுத்திகொள்ள குறைந்த கால அவகாசமே உள்ளது. அதே நேரம் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாடி விட்டு இறுதி போட்டியில் இந்திய அணியை சந்திக்கிறது. இது நியூசிலாந்து அணிக்கு சாதகமாகவும், இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த இறுதிப்போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் "இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியை 3 போட்டிகளாக நடத்தி இருக்கலாம், முதல் போட்டியில் தோல்வியடைந்தால் கூட அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். ஏற்கனவே டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருவது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் "8 முதல் 10 பயிற்சி செஷன் இந்திய அணிக்கு இருக்கிறது என்றாலும், ஒரு போட்டியில் விளையாடி தயாராவதற்கு இணையாக அது இருக்காது. இறுதி போட்டியில் இருவருக்கும் சமவாய்ப்பு இருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமான நிலை அதிகமாக இருக்கிறது" என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடன் ஒப்பிடும் போது இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் முதல்முறையாக இங்கிலாந்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க இருக்கும் ரோஹித் சர்மா, கில் ஆகியோர் டியூக் பந்துகளை எதிர்கொள்ள விரைவாக பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அறிய :டிராவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து!
"ரோஹித் சர்மா தற்போது மிகவும் அனுபவம் வாய்ந்த டெஸ்ட் வீரராக மாறிவிட்டார், துவக்க ஆட்டக்காரராக 4 சதங்கள் அடித்துள்ளார் ஆனால் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை ரோஹித் ஷர்மா, கில் ஆகிய இருவரும் தொடங்குவது இதுவே முதல் முறையாகும். டியூக் பந்து துவக்கத்தில் அதிகமாக ஸ்விங் ஆகும், அதற்கு ஏற்ற வகையில் இருவரும் தயாராகிக்கொள்ளவேண்டும்" என்று யுவராஜ் கூறியுள்ளார்.
இளம் வீரர் ஷுப்மன் கில் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். "கில் மிக இளம் வீரர், அனுபவம் வாய்ந்த வீரரில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார், அது அவருக்கு நம்பிக்கையை கொடுக்கும். அந்த தன்னம்பிக்கை இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் சிறப்பாக செயல்படலாம்" என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நேரத்தில் ஒரு செஷன் என ஆட்டத்தை பிரித்து கவனம் செலுத்தவேண்டும், இங்கிலாந்தில் காலை நேரத்தில் ஸ்விங் அதிகமாக இருக்கும், உணவு இடைவெளிக்கு பிறகு ரன்கள் அடிக்க எளிதாக மாறும், மீண்டும் தேநீர் இடைவெளிக்கு பிறகு பந்து ஸ்விங் ஆகும், இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு விளையாடவேண்டியது அவசியம் என யுவராஜ் சிங் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து தனது பார்வையைத் தெரிவித்துள்ளார்.