Tulsimathi Murugesan: "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வெளிமாநில பயிற்சி தேவையில்லை” - துளசிமதி முருகேசன்
கிராம பகுதிக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி விளையாட்டை ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு. விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது என மாரியப்பன் தங்கவேலு பேட்டி.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா துணை முதல்வர் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மற்றும் துளசிமதி முருகேசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் வழங்கினார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கு 1500 மேற்பட்டவருக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து, கால்பந்து, கைப்பந்து, வலை பயிற்சி நெட்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள் என மொத்தம் 707 ஊராட்சிகளில் உள்ள 1500 மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து, கால்பந்து, கைப்பந்து, வலை பந்து நெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். விழாவில் சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, துணை முதல்வர் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இவ்விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரா ஒலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் "தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு துணையாக இருக்கிறது. தமிழகத்தில் விளையாட்டு துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களே பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு தமிழகத்தில் முழு உடல் தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் அனைத்து அரசு திட்டங்களும், வேலை வாய்ப்புகளும், நிதி உதவியும் கிடைக்கிறது. சர்வதேச அளவிலான பதக்கங்களை வெல்ல வெளிமாநிலங்களுக்கு சென்று பயிற்சி பெற தேவையில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு பயிற்சி பெற தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, "கிராம பகுதிக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி விளையாட்டை ஊக்குவித்து வருகிறது அரசு. விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு சிரமமாக இருந்த விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர், பயிற்சி, உணவு, அரசு திட்டங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் துணையாக உள்ளனர் என்று கூறினார்.