மேலும் அறிய
Advertisement
காயங்கள்.. கொரோனா.. கிரிக்கெட் மைதானம்.. என்ன செய்கிறார் நடராஜன்?
இந்த சூழலிலும் தன்னைப்போன்ற எளிய பின்னணியை கொண்ட அடுத்தடுத்த சந்ததிகளை மனதில் வைத்து ஒரு மைதானம் கட்ட எண்ணும் அந்த மனம் பாராட்டுக்குரியது!
பிரபலமான கிரிக்கெட் மைதானங்களான சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட் (SCG) மெல்பர்ன் கிரிக்கெட் கிரவுண்டை போன்று நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட் (NCG) என தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டமைக்கப்போவதாக தமிழக வீரரான நடராஜன் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்.
நடராஜன் பின்தங்கிய குடும்பச்சூழலில் பிறந்து வளர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகே தனக்கான வாய்ப்பைப் பெற்று ஒரு நட்சத்திர வீரராக உயர்ந்தார். அந்த ஆரம்பகால கஷ்டங்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் கடந்த ஓராண்டாக சிரமப்பட்டு வருகிறார். ஆனால், அது பொருளாதாரரீதியாக இல்லை. கிரிக்கெட்ரீதியாக!
கடந்த 2020 ஐ.பி.எல் சீசன்தான் நடராஜன் மீது பெரும் வெளிச்சத்தை பாய்ச்சியது. தனது துல்லியமான யார்க்கர்களால் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருந்தார். சர்வதேச பந்துவீச்சாளர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளி அந்த சீசனில் அதிக யார்க்கர்கள் வீசிய பந்துவீச்சாளர் என்ற ரெக்கார்டை படைத்திருந்தார். 83' உலகக்கோப்பை நாயகனான கபில்தேவே நடராஜன் தான் என்னுடைய ஹீரோ என கூறி நட்டுவை பெருமிதப்படுத்தியிருந்தார்.
அந்த ஐ.பி.எல் சீசனுக்கு பிறகு தொடங்கிய ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இன்னொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்திருந்தது. ஆனால், அவர் காயம் காரணமாக அந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போக அவருக்கு பதில் நடராஜன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு பறந்த நடராஜன் ஒரே சுற்றுப்பயணத்தில் டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று ஃபார்மட்டிலும் இந்திய அணிக்கு அறிமுகமாகி அசத்தியிருந்தார். காபாவில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியில் நடராஜனின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவு இருந்தது.
ஐ.பி.எல், ஆஸ்திரேலிய தொடர் என ஒரு மூன்றே மாதத்தில் கிரிக்கெட் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக நடராஜன் இருந்தார். சின்னப்பம்பட்டியிலிருந்து துபாய்க்கு கிளம்பிய போது சாதாரண நபராக சென்றவர் ஒரு சூப்பர் ஸ்டாராக திரும்பி வந்தார். நடராஜன் தமிழகத்தின் பெருமையாக போற்றப்பட்டார். இளைஞர்களின் ரோல் மாடல்களின் பட்டியலில் நடராஜனும் இடம்பிடிக்க தொடங்கினார்.
எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருந்த போதுதான் அடுத்தடுத்த சோதனைகள் நடராஜனை சுற்றி வளைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் காயங்களால் அவதியுற்றார். இதனால் 2021 ஐ.பி.எல் முதல் சீசனில் நடராஜனால் ஆட முடியாமல் போனது. காயங்களுக்கான சிகிச்சையை முடித்துவிட்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்.
நடராஜனின் அசூர வளர்ச்சியை பார்த்த போது நிச்சயமாக உலகக்கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தோன்றியது. ஆனால், காயத்திற்கு பிறகு அவர் தன்னை நிரூபிக்கவில்லை என்பதால் பிசிசிஐ நடராஜனை நிராகரித்தது.
காயத்திலிருந்து மீண்டு ஐ.பி.எல் இன் இரண்டாம் பாதியில் தன்னை நிரூபித்துக் காட்ட நடராஜன் தயாரானார். ஆனால், நடராஜன் மீண்டும் ஒரு மிகப்பெரிய சோதனைக்கு உள்ளானர். நடராஜன் உட்பட சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே நடராஜனால் இரண்டாம் பாதி ஐ.பி.எல் ஐயும் ஆட முடியாமல் போனது.
ஊருக்கு திரும்பியவர் ஓய்விற்கு பிறகு உள்ளூர் தொடரான சையத் முஷ்தாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கினார். இந்த தொடரில் நடராஜனின் பெர்ஃபார்மென்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. நீண்ட கால ஓய்விற்கு பிறகு பழைய ரிதத்தை பிடிப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டார். சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் ஆடிய போட்டிகள் அத்தனையிலும் 10 அல்லது 10 க்கும் மேல் எக்கானமி வைத்திருந்தார்.
செட் ஆவதற்கு டைம் எடுக்கிறார் விஜய் ஹசாரே ட்ராஃபியில் பழைய நட்டுவாக கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு காயம் அதே முட்டியில்! நடராஜன் விஜய் ஹசாரே தொடரிலும் ஆட முடியாமல் போனது. அதன்பிறகு, தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடராஜன் தான் இப்போது சொந்த ஊரில் மைதானம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறார்.
வெளிச்சம் கிடைக்கும் வரை மட்டுமில்லை வெளிச்சம் கிடைத்த பிறகுமே கூட தன்னுடைய இடத்திற்காக நடராஜன் போராடிக் கொண்டேதான் இருக்கிறார். இந்த சூழலிலும் தன்னைப்போன்ற எளிய பின்னணியை கொண்ட அடுத்தடுத்த சந்ததிகளை மனதில் வைத்து ஒரு மைதானம் கட்ட எண்ணும் அந்த மனம் பாராட்டுக்குரியது!
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion