SRH vs PBKS, IPL 2021 Photos : பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்த ஹைதராபாத்..
பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ஹைதராபாத் அணி பதிவு செய்துள்ளது.
சென்னையில் இன்று ஐ.பி.எல். தொடரின் 14-வது ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதினர். முதல் வெற்றிக்காக ஹைதராபாத் அணியும், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பஞ்சாப் அணியும் களத்தில் இறங்கினர். இதில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், புவனேஸ்வர் பந்துவீச்சில் ராகுல் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய கிறிஸ் கெயில் நிதானமாகவே ஆடினார். அப்போது 25 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் கலீல் அகமது பந்துவீச்சில் ரஷீத்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கு அடுத்து நிகோலஸ் பூரன் களமிறங்கினார். இந்த தொடர் தொடங்கியது முதல் பார்மிலே இல்லாத பூரன், எந்த பந்துகளையும் சந்திக்காத நிலையிலே டேவிட் வார்னரால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். கெயிலின் அதிரடியை எதிர்பார்த்து காத்திந்த ரசிகர்களுக்கு 17 ரன்களில் ஆட்டமிழந்து கெயில் ஏமாற்றத்தையே அளித்தார். இதையடுத்து, முதல் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய தீபக் ஹூடாவும் களமிறங்கினார். அவரும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், ஹென்ரிக்ஸ் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, தமிழக வீரர் ஷாரூக்கான் களமிறங்கினார். கடைசி கட்டத்தில் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசிய ஷாரூக்கான் 22 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 19.4 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே குவித்தது.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் ஹைதராபாத் அணி 10.1 ஓவர்களில் 73 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 37 ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கனே வில்லியம்ஸன் களத்தில் இறங்கினார். ஏற்கனவே ஆட்டம் முழுவதும் ஹைதராபாத் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில், ஜானி பார்ஸ்டோ – வில்லியம்ஸன் ஜோடி அணியை வெற்றி பெறவைத்தது.
ஜானி பார்ஸ்டோ 56 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்தார். வில்லியம்ஸன் 16 ரன்களை எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 121 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 63 ரன்களை குவித்த ஜானி பார்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டி தொடங்கும் முன் 8வது இடத்தில் இருந்த ஹைதரபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி கடைசி இடத்திற்கு பின்தங்கியுள்ளது.