Sania Mirza Retirement: “2022ஆம் ஆண்டுதான் எனது கடைசி ஆட்டம்” சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவருமானவர் சானியா மிர்சா. 35 வயதான சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்துள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா தனது புதிய ஜோடியான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்சோனோக்குடன் இணைந்து ஸலோவேனியாவின் டமாரா ஜிடன்செக் மற்றும் காஜா சுவான் ஜோடியை எதிர்த்து இன்று விளையாடினர். சுமார் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சானியா மிர்சா இணை தோல்வியடைந்தது.
இந்த தோல்விக்கு பிறகு சானியா மிர்சா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இந்த தோல்விக்கு சில காரணங்கள் உள்ளன. நான் மீள்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறேன். எனது மூன்று வயது மகனுடன் இவ்வளவு பயணம் செய்வதால் நான் அவனை ஆபத்தில் ஆழ்த்துகிறேன். இதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனது உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
எனது முழங்கால் இன்று மிகவும் காயமடைந்துவிட்டது. ஆனால், இதை எங்களது தோல்விக்கு ஒரு காரணமாக கூறமாட்டேன். ஆனால், எனக்கு வயதாகி வருவதால் எனக்கு குணமடைய நீண்ட நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். எனக்குள் இருக்கும் உந்துதலை நான் தினமும் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது போன்று இப்போது ஆற்றல் இல்லை.
நான் மகிழ்ச்சியாக ரசித்து ஆடும்வரை விளையாடுவேன் என்று எப்போதும் கூறுவேன். இனிமேலும் நான் ரசித்து ஆடுவேன் என்று உறுதியாக சொல்ல எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றை மட்டும் உறுதியுடன் சொல்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி சீசனாக இருக்கப் போகிறது. இந்தாண்டைத் தொடங்கும்போது டிசம்பர் கூட எனது கடைசி சீசனாக இருக்கலாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.
எனது உடல் ஒத்துழைக்கும் விதத்தை பார்க்கும்போது, என்னால் சீசனை முடிக்க முடியாது என்று நினைக்கிறேன். நான் இந்த முழு சீசனையும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்தாண்டு மட்டும் 9 தொடர்கள் விளையாடினேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவில் மகளிரும் சாதிக்க முடியும் என்பதற்கு சானியா மிர்சா ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் அசத்தல் வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா 2016ம் ஆண்டு மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு தொடரை வென்றார். ஓஸ்ட்ரவா ஓபன் தொடரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சூவாய்ஷாங்குடன் இணைந்து தனது 43வது டிராபியை வென்றிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாக 27வது இடம் வரை அடைந்து சாதனை படைத்துள்ளார். சானியா மிர்சாவின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சானியா மிர்சா இதுவரை 3 மகளிர் கிராண்ட்ஸ்லாம் தொடரையும், 3 கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்