Virat Kohli Captaincy| கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...? புதிய கேப்டன் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 வீரராக வலம் வருபவர் விராட் கோலி. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரில் 7 இன்னிங்சில் ஆடி இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார். மேலும், விராட் கோலி கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதமடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடிக்காததும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு இந்திய அணி உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில், அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த தகவலின்படி, இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாகவும், அந்த பொறுப்பை துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், இழந்த தனது பார்மை மீட்பதற்காகவுமே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், உலககோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி இதை அறிவிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். மற்றும் உலக கோப்பை போட்டித் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி நடப்பாண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 447 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 72 ரன்களை அடித்துள்ளார்.
2014ம் ஆண்டு தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததால் திடீரென கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட்கோலி, 2017ம் ஆண்டு முதல் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். விராட் கோலி இதுவரை கேப்டனாக 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்து, 65 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். 27 போட்டிகளில் தோல்வியை இந்திய அணி தழுவியுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
விராட் கோலி தலைமையில் 45 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அண 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 69 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 வெற்றியை பெற்றுள்ளது. 17 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இவற்றில் வெளிநாடுகளில் 17 வெற்றியையும், உள்நாட்டில் 23 வெற்றிகளையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றிலே கங்குலி, தோனிக்கு பிறகு வெற்றிகரமான கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. ஆனால், தற்போது அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை எந்தவொரு உலககோப்பையையும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றாவிட்டாலும், விராட் கோலி அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டிகளில் 6 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.