Pro Kabaddi 2024: 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! மிரட்டல் கம்பேக் தந்த தமிழ் தலைவாஸ்!
Tamil Thalaivas vs UP Yoddhas: தொடர் தோல்வியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி 19 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ப்ரோ கபடி லீக் 10வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மோசமாக ஆடி வந்தது.
இந்த நிலையில், மும்பையில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி.யோத்தாஸ் அணியும் மோதின. இந்த தொடரில் 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும், 10வது இடத்தில் உள்ள உ.பி.யோத்தாஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதின.
மிரட்டிய தமிழ் தலைவாஸ்:
இந்த போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றி நோக்கி களமிறங்கின. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கி தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து ஆடிய உ.பி.யோத்தாஸ் அணியினர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் ரைடு செல்லும்போது புள்ளிகளை அள்ளினார். எதிரணி வீரர்களை தொட்டு மட்டும் 11 புள்ளிகளும், போனஸ் மூலம் 3 புள்ளிகளை அள்ளினார். சிறப்பாக ஆடிய சாஹர் சூப்பர் டேக்ளில் 6 புள்ளிகளை அள்ளினார். ஷகில்சிங் சூப்பர் டேக்ளில் 5 புள்ளிகளை அள்ளினார்.
19 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி:
தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் களத்திற்குள் வந்த உ.பி.யோத்தாஸ் அணி வீரர்கள் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணி வீரர்களிடம் பிடிபட்டனர். இதனால், போட்டியின் முடிவில் 46- 27 என்று புள்ளிகள் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி இதனால் உ.பி. யோத்தாஸ் அணியை காட்டிலும் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி இதன்மூலம் 7 போட்டிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் எதிரணி வீரர்களை 3 முறை ஆல் அவுட்டாக்கினர். இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 11வது இடத்திலே நீடிக்கிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் உள்ளது. புனேரி பல்தான் அணி 10 ஆட்டங்களில் 9 வெற்றி 1 தோல்வியுடன் 46 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தபாங் டெல்லி அணி 40 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.