வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!
Thulasimathi: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் ஒற்றைய பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களை வென்றது.
பாரா ஒலிம்பிக் போட்டியில், பேட்டமிட்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கணையை எதிர்த்து காஞ்சிபுரம் பெண் மோதுகிறார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியான நிலையில் அவர் தங்கம் வெல்வரா என்று காஞ்சிபுரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
யார் இந்த துளசிமதி முருகேசன்?
காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(22). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்தே இவரது தந்தை இவருக்கு பயிற்சி அளித்தார். அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்டமிட்டன் பிரிவில் வெற்றி பெற்றார்.
இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். துளசிமதி முருகேசன் கடந்த 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார். சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடும் , துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. இவரது தந்தை முருகேசன், பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். சிறுவயதில் இருந்து தனது மகள் துளசிமதிக்கு, பேட்மிட்டன் பயிற்சி அளித்து வந்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளை மீறியும், தனது பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்ததாக அவரது தந்தை முருகேசன் நம்மிடம் தெரிவித்தார்.
இறுதிப்போட்டி
இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இவருக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இவர் பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இவர் சீனாவின் யங் என்ற வீராங்கணையுடன் மோதுகிறார்.
மக்கள் எதிர்பார்ப்பு
இந்த யங் இதுவரை வேறு யாரிடமும் தோல்வியை சந்திக்காதவர். ஆசிய அளவிலான போட்டியில் ஒரு முறை மட்டும் இறுதி போட்டியில் மோதும் காஞ்சிபுரம் துளசிமதியிடம் தோல்வி அடைந்துள்ளார். அந்த நம்பிக்கையில் யங்கை எதிர்கொள்கிறார் துளசிமதி. துளசிமதிக்கு வெள்ளிப்பத்ககம் உறுதியான நிலையில் அவர் தங்கம் வெள்வாரா? என்று காஞ்சிபுரம் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில்,“துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன். அவருக்கு வெள்ளிப்பத்ககம் உறுதியான நிலையில் இறுதிப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. காஞ்சிபுரம் மக்களைப் போல் நானும் அவரது இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன்” என்றார்.