Inzamam ul haq | பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜமாமுக்கு மாரடைப்பு..!
Inzamam Ul Haq Suffers Heart Attack: பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமானவர் இன்ஜமாம் உல் ஹக்(Inzamam Ul-Haq). இவருக்கு கடந்த மூன்று நாட்களாக லேசான நெஞ்சு வலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இன்ஜமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பு தற்போது இன்ஜமாம் உல் ஹக் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, இன்ஜமாம் உல் ஹக்கிற்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, இன்ஜமாம் தற்போது நலமுடன் உள்ளார். இருப்பினும் அவரது உடல்நலத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்ஜமாம் உல் ஹக் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Prayers for @Inzamam08 bhai for speedy recovery In shaa Allah he will be fine 🤲
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) September 27, 2021
சமூக வலைதளங்களில் இன்ஜமாம் உல் ஹக் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பிரார்த்தித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது டுவிட்டர் பக்கத்தில், இன்ஜமாம் விரைந்து குணமடைய வேண்டும். இன்ஷா அல்லா அவரை குணமாக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் பிறந்த இன்ஜமாம் உல் ஹக்கிற்கு தற்போது 51 வயதாகிறது. அவர் பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சதங்கள், 2 இரட்டை சதம், ஒரு முச்சதத்துடன் 8 ஆயிரத்து 830 ரன்கள் குவித்துள்ளார். 378 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 சதம், 83 அரைசதங்களுடன் 11 ஆயிரத்து 739 ரன்கள் குவித்துள்ளார். 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இன்ஜமாம் உல் ஹக் 2007ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட இன்ஜமாம் உல் ஹக் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்தார். உலககோப்பை தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியின் எதிர்காலம் கருதி தனது பதவியில் இருந்து விலகினார். சச்சின், கங்குலி, டிராவிட் காலத்தில் ஆடிய இன்ஜமாம் உல் ஹக்கிற்கு பாகிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : IPL SRH vs RR : ராஜஸ்தானை அதிரடியாக வென்ற ஹைதராபாத் - போட்டோ ஹைலைட்ஸ்...!