Tokyo Paralympic | டோக்கியோ பாராலிம்பிக் : துப்பாக்கிச் சுடுதல் இறுதிப்போட்டியில் ராகுல் ஜாகர் 5-வது இடம்பிடித்து ஏமாற்றம்..
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 25 மீட்டர் பிஸ்டல் கலப்பு பிரிவு போட்டியில் இந்தியாவின் ராகுல் ஜாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. முதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சிங்கராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்று இருந்தார். இந்தச் சூழலில் இன்று காலை 25 மீட்டர் பிஸ்டல் கலப்பு பிரிவு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இதில் ரேபிட் மற்றும் பிரிசிஷன் ஆகிய இரண்டு முறையில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் பிரிசிஷன் பிரிவில் 93,95,96 என மொத்தமாக 284 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் ரேபிட் பிரிவில் 95,98,99 என மொத்தமாக 292 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் இரு பிரிவுகளிலும் மொத்தமாக 576 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் ராகுல் ஜாகர் தொடக்கத்தில் சற்று நன்றாக இலக்கை நோக்கி சுட்டார். அதன்பின்னர் சற்று தடுமாறினார். இறுதியில் 12 புள்ளிகள் மற்றும் பெற்று ஐந்தாவது இடத்துடன் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் முறையாக பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள ராகுல் ஜாகர் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தார்.
#Tokyo2020 #Paralympics #Shooting #IND ‘s #RahulJakhar finishes in 5th position in the Mixed 25m Pistol Shooting Finals. Great performance by the Indian shooter.
— Sports For All (@sfanow) September 2, 2021
#Praise4Para #Cheer4India #AbJeetegaIndia
முன்னதாக இன்று காலை நடைபெற்ற 25 மீட்டர் பிஸ்டல் கலப்பு தகுதிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் ஆகாஷ் பங்கேற்று இருந்தார். அவர் பிரிசிஷன் பிரிவில் 93,89,96 என மொத்தமாக 278 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் ரேபிட் பிரிவில் 87,92,94 என மொத்தமாக 273 புள்ளிகள் பெற்றார். இரு பிரிவுகளிலும் சேர்ந்து அவர் மொத்தமாக 551 புள்ளிகள் பெற்றார். மேலும் தகுதிச் சுற்றில் 20ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் ஆகாஷ் தகுதிச் சுற்றுடன் வெளியேறு ஏமாற்றம் அளித்தார்.
மேலும் படிக்க: பாராலிம்பிக் படகுப்போட்டி : அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்திய வீராங்கனை..