டோக்கியோ பாராலிம்பிக் : வினோத் குமாரின் வெண்கலப் பதக்கத்தை ரத்து செய்தது தொழில்நுட்ப குழு.. ஏன்?
எஃப்-52 வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் பெற்ற வெண்கலப் பதக்கத்தை பாராலிம்பிக் தொழில்நுட்ப குழு திரும்ப பெற்றுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் இந்தியா சார்பில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இந்தச் சூழலில் நேற்று ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் வினோத் குமார் பங்கேற்றார். இதில் தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். தன்னுடைய ஆறாவது வாய்ப்பில் அவர் 19.81 மீட்டர் தூரம் வீசினார். தன்னுடைய அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் வினோத் குமார் 3ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கதையும் வென்று அசத்தியிருந்தார். எனினும் இந்தப் பிரிவுன் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய தொழில்நுட்ப குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தொழில்நுட்ப குழு தன்னுடைய முடிவை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, "இந்தப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் உடல் பாதிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த வினோத் குமார் எஃப்-52 பிரிவில் பங்கேற்க முழுமையாக தகுதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆகவே அவர் வென்ற வெண்கலப்பதக்கம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவரின் போட்டி முடிவுகளும் ரத்தாகிறது"எனத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) பணிபுரிந்து வந்தார். இந்திய துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்த போது இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இவருடைய கால்கள் இரண்டும் செயலிழக்கும் நிலை உருவானது. அத்துடன் இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் இவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் உடல்நலம் சற்று சரியான பிறகு பாரா தடகள போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 2016ஆம் ஆண்டு முதல் வட்டு எறிதல் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
#BreakingNews#TeamIndia Para Discus Thrower #VinodKumar loses his Bronze medal as he is ruled ineligible in the classification reassessment by the technical delegates of the Paralympics.#Praise4Para #Paralympics #Tokyo2020
— Sports For All (@sfanow) August 30, 2021
2017 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாரா தடகள போட்டியில் இவர் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் 4ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை சற்று தவறவிட்டார். இப்படி இருக்கும் பட்சத்தில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலம் வென்று இருந்தார். ஆனால் தற்போது அந்தப் பதக்கம் திரும்ப பெற பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:11 வயதில் விபத்து... 19 வயதில் தங்கம்... முதுகு தண்டு பாதிப்பில் மீண்ட ‛பீனிக்ஸ்’ அவானி லெகாரா!