Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை : ஆடவர் குழுப் போட்டி காலிறுதியில் இந்தியா தோல்வி..!
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் குழுப் போட்டியில் இந்திய அணி காலிறுதிச் சுற்றில் தென்கொரியா அணியிடம் தோல்வி அடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமரி, அடானு தாஸ், தருண்தீப் ராய்,பிரவீன் ஜாத்வ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். கடந்த 23ஆம் தேதி வில்வித்தை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் தீபிகா குமாரி மகளிர் பிரிவில் 9-ஆவது இடத்தையும், ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி 9ஆவது இடத்தையும் பிடித்தது. கலப்பு பிரிவிலும் இந்திய அணி 9ஆவது இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து ஆடவர் குழு போட்டியில் இந்திய அணி கஜகிஸ்தான் அணியை எதிர்த்து முதல் சுற்றில் விளையாடியது. அதில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. அதில் முதல் செட்டில் தென்கொரிய வீரர்கள் மாறி மாறி 10 புள்ளிகளை எடுத்து வந்தனர். இந்திய வீரர்கள் இரு முறை 10 புள்ளிகள் எடுத்தனர். இதனால் முதல் செட்டை தென்கொரிய அணி வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக தொடங்கினர் எனினும் தென் கொரிய வீரர்கள் அதிலும் சிறப்பாக வரிசையாக 10 புள்ளிகள் எடுத்து 59-57 என்ற கணக்கில் வென்றனர். இதனால் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் இந்திய வீரர்கள் சற்று சொதப்பினர். வரிசையாக 9 மற்றும் 8 புள்ளிகள் எடுத்தனர். மறு புறம் தென் கொரிய வீரர்கள் தொடர்ச்சியாக 10 புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் 6-0 என்ற கணக்கில் தென் கொரிய அணி இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
It's curtains for the #IND Men's Archery Team. They lost to #KOR 6-0 in the quarter-final 🏹#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion https://t.co/iebVRTkuGl
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021
முன்னதாக கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்தச் சூழலில் மகளிர் தனிநபர் பிரிவு போட்டிகள் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி பங்கேற்க உள்ளார். முதல் போட்டியில் அவர் பூடான் நாட்டைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையை எதிர் கொள்ள உள்ளார். ஆடவர் குழு அணியும் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
மேலும் படிக்க: நெருக்கடிகள்.. முன்னாள் முதல்வரின் உதவி.. ஒலிம்பிக் சாதனையை எட்டிப்பிடித்த பவானிதேவி..!