Tokyo Olympics 2020: தோல்வியை நினைத்து அழ நேரமில்லை ... வெண்கலத்தில் கவனம் ... இந்திய ஹாக்கி வீரர்களின் தீர்க்கம்..!
கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் வெண்கலப் பதக்க விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தோல்வி குறித்து நினைப்பதற்கு நேரமில்லை என்று கூறினார்கள்.
ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்ற இந்திய அணி உலக சாம்பியனான பெல்ஜியத்திற்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.
தோல்விக்கு பிறகு அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், “இப்போது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஏனென்றால் நாங்கள் வெற்றி மனநிலையுடன் வந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக போட்டியில் வெற்றி பெறவில்லை. இப்போது நாங்கள் அடுத்த வெண்கலப் பதக்கப் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். பதக்கம் பெற வேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு அரையிறுதிக்கு வருவது எங்களுக்கு ஒரு பெரிய மரியாதை. ஆனால் இப்போது நாங்கள் அடுத்தப் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும், குறைந்தபட்சம் நாட்டிற்காக ஒரு வெண்கலப் பதக்கத்தை வெல்ல வேண்டும். இந்த நிலையை அடைய கடந்த 5 ஆண்டுகளாக கடினமாக உழைத்தோம். சிறந்த முடிவுக்கு இந்தியா தகுதியானது. இந்த அணி கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக உள்ளது. இந்த நிலையை அடைய நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். நாங்கள் சிறப்பாக தகுதி பெற்றிருக்கிறோம், துரதிருஷ்டவசமாக இன்று எங்களால் வெற்றி பெற முடியவில்லை” என்றார்.
அணியின் நட்சத்திர கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கூறுகையில், “பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி கடந்த காலத்தின் ஒரு விஷயம். இங்கிருந்து பதக்கத்துடன் வீடு திரும்புவதில் அணி கவனம் செலுத்த வேண்டும். ஏமாற்றம்தான், ஆனால் அதைப் பற்றி கவலைப்பட எங்களுக்கு நேரம் இல்லை. நீங்கள் அதை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இப்போது எங்களுக்கு இன்னும் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது, இந்த நேரத்தில் அழுவதை விட அது எங்களுக்கு முக்கியம். எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது, எங்கு தோற்றோம், எங்கே தவறுகளைச் செய்தோம், அதைச் சரிசெய்து, முன்னேறுவது மிகவும் முக்கியம்" என்று கூறினார்.
இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.