Tokyo Olympics: ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல் !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். இதனால் 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனை பெரோவாவை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் செட்டை 28-25 என்ற கணக்கில் தீபிகா குமாரி வென்றார். இதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடைசி வாய்ப்பில் 7 புள்ளிகள் எடுத்ததால் தீபிகா குமாரி 26-27 என்ற கணக்கில் அந்த செட்டை இழந்தார். இருவரும் தலா 2 செட் புள்ளிகளை பெற்று இருந்தனர். மூன்றாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட தீபிகா குமாரி 28-27 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
நான்காவது செட்டில் வெற்றி பெற்றால் தீபிகா குமாரி போட்டியை வெல்ல முடியும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த செட்டில் இரு வீராங்கனைகளும் தலா 26 புள்ளிகள் எடுத்ததால் இருவருக்கும் ஒரு செட் புள்ளி வழங்கப்பட்டது. தீபிகா குமாரி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட ரஷ்ய வீராங்கனை 28-25 என புள்ளிகள் பெற்று செட்டை வென்றார். இதனால் 5 செட் முடிவில் இரு வீராங்கனைகளும் தலா 5-5 என புள்ளிகள் பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை பயன்படுத்தப்பட்டது. அதில் 10 புள்ளிகள் எடுத்து தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
Such a relief!
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
Deepika Kumari is through to QF with 5-6 hard-fought win over Ksenia Perova.
Shoot-off decided the result.
📷 :@worldarchery #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/vJSJhAAn4A
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் இந்தியாவின் அடானு தாஸ் பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அடானு தாஸ் ஷூட் ஆஃப் முறையில் ஜின்ஹெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப் பெற்று அசத்தினார். நாளை நடைபெற உள்ள மூன்றாவது சுற்றில் அவர் ஜப்பான் வீரரை எதிர்த்து விளையாட உள்ளார்.
ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர். அதேபோல் ஆடவர் குழுப் போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தென்கொரியா அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கலப்பு பிரிவிலும் தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் இணை காலிறுதியில் தென்கொரியா அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஒரு பதக்கத்துடன் காத்திருக்கும் இந்தியா... முதலிடத்துக்கு போட்டிபோடும் 3 நாடுகள்