India Medal Tally, Olympic 2020: ஒரு பதக்கத்துடன் காத்திருக்கும் இந்தியா... முதலிடத்துக்கு போட்டிபோடும் 3 நாடுகள்
மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 46-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 43வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 46-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 43வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 15 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 15 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 14 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று:
பேட்மிண்டன்: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஹாக்கி: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி குரூப் போட்டியில் இந்திய அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இந்திய அணி அடுத்த தன்னுடைய கடைசி குரூப் போட்டியில் ஜப்பான் அணியை நாளை மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்திய அணி மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தை: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் தென்கொரிய வீரரை வீழ்த்தி அசத்தினார். இருவரும் தலா 28 புள்ளிகள் பெற்றனர். இதனால் 5-5 என்ற கணக்கில் இருவரும் சமமாக இருந்தனர். எனவே வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை பயன்படுத்தப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட அடானு தாஸ் 10 புள்ளிகள் எடுத்து வென்றார். இதன்மூலம் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தென்கொரிய வீரரை வீழ்த்தி அடானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
This is HUGE folks: #Archery : Atanu Das stuns former Olympic & World Champion Oh Jinhyek of South Korea 6-4 in 2nd round and is now through to Pre-QF.
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
Shoot-off decided the final result. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/soFH0H1AaQ
குத்துச்சண்டை: இன்று நடைபெற்ற 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிச் சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் அவரும் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்வார். ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் சதீஷ் குமார் பெற்றுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் முதல் தகுதிச் சுற்று : மனு பாக்கர் 5ஆவது இடம் , ராஹி சர்னோபட் பின்னடைவு. நாளை இந்தப் பிரிவில் ரெபிட் தகுதிச் சுற்று நடைபெறும். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதிப் போட்டி நாளை மதியம் நடைபெறும்.
குத்துச்சண்டை: 51 கிலோ எடைப்பிரிவில், இரண்டாவது சுற்றில், மேரி கோம் இன்று களமிறங்கினார். இந்த போட்டியில், கொலம்பியா வீராங்கனை இங்கிரித் வேலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் இரண்டு சுற்றில் மேரி கோம் தோல்வியடைந்து, போட்டியை இழந்தார். போராடி தோற்ற மேரி கோம், உணர்ச்சி ததும்ப அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்!