Paralympic 2024:களைகட்டிய பாராலிம்பிக்.. பதக்கம் வெல்ல காத்திருக்கும் தமிழ்நாட்டு வீரர்கள் யார்?
பாராலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றுள்ள வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை பார்ப்போம்
பாராலிம்பிக் 2024:
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்ற சில தினங்களிலே பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குவது வழக்கம். ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நேற்று (ஆகஸ்ட் 28) நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த தொடரில் சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் சுமார் 12 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக கடந்த முறை டோக்கியோவில் நடைபெற்ற பாரலிம்பிக்கில் இந்தியா சார்பில் 38 பேர் கலந்து கொண்டனர். அதில் மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா தட்டிச் சென்றது. அதே நேரம் இந்த முறை 84 வீரர்கள் களம் காண்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது ரசிகர்களிடம்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து எத்தனை விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சாதனை படைப்பாரா மாரியப்பன் தங்கவேலு:
உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். மாரியப்பன் தங்கவேலு ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இச்சூழலில் தான் இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறார்.
Paralympics: Live on DD Sports & JioCinema https://t.co/8L2JnNwbqs
— India_AllSports (@India_AllSports) August 29, 2024
அதேபோல், பாரா பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீரர் சிவராஜன் பங்கேற்கிறார். இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். அதேபோன்று ஆசிய பாரா 2023 தொடரில் சிவராஜன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்.
மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் விளையாட உள்ளார். மற்றொரு வீராங்கனைகளாக பாரா பேட்மிண்டன் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ சிவன் பங்கேற்கிறார்கள். பவர்லிப்டிங் மகளிர் 67 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி களம் காண்கிறார்.