Hockey, Olympics 2024: ஒலிம்பிக்கில் ஹாக்கி.. உருவானது எப்படி? இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை?
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய ஹாக்கி அணி விளையாட உள்ளது. இச்சூழலில் ஹாக்கி குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான். ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இச்சூழலில் இதில் கலந்து கொள்ள உள்ள இந்திய ஹாக்கி அணி குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்
ஹாக்கி:
ஹாக்கி விளையாட்டு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டுகளில் ஒன்று. 16ஆம் நூற்றாண்டில் எகிப்து ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டிருந்தது. இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் மூலம் 1850ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியாவிற்கு வந்தது. முதலில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது. 1900களில் இந்த விளையாட்டு இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைய தொடங்கியது.
1924ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவானது. அதற்கு அடுத்த ஆண்டு 1925ல் இந்திய ஹாக்கி சங்கம் உருவாக்கப்பட்டது.
அதே ஆண்டில் இந்திய ஹாக்கி அணி முதல் முறையாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. ஹாக்கி ஜாம்பவான் என்று கருதப்படும் தாதா மேஜர் தயான்சந்த் இளம் வீரராக அப்போது களமிறங்கி இருந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி:
ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக கடந்த 1908 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் 1920ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக விளையாடப்பட்டது. எனினும் அதற்கு பிறகு ஹாக்கி சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவான உடன் 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டேம் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் ஹாக்கி சேர்க்கப்பட்டது.
இந்திய ஹாக்கி சங்கம் 1927ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றதால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றது. அதன்பின்பு நடந்தது ஒரு பெரிய வரலாறு.
1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்திய ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 29 கோல்கள் அடித்து இந்திய அணி அசத்தியது. அதில் மேஜர் தயான்சந்த் மட்டும் 14 கோல்கள் அடித்து அசத்தினார். பின்னர் 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. பின்னர் 1948, 1952 மற்றும் 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது இந்திய ஹாக்கி அணி.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தொடர் வீழ்ச்சியை சந்தித்தது. இடையில் ஒருமுறை அதாவது 1980 ஆம் ஆண்டு மாஸ்கேவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கத்தை வென்றது. இதனைத்தொடர்ந்து கடந்து 2014 ஆம் ஆண்டிக் இந்திய அணி ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றது.
அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இப்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. மொத்தம் 8 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் என இந்திய ஹாக்கி ஆடவர் அணி வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. இந்த உத்வேகத்துடன் தான் இந்திய ஹாக்கி அணி இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரை எதிர்கொள்ள உள்ளது. வரும் ஜூலை 27-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ஒலிம்பிக் போட்டியுடன் இந்தியா தங்களது ஆட்டத்தை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.