2 முறை கொரோனா.. வாமிட்.. டிப்ரெஷன்.. நான் உடைஞ்சு போயிருக்கேன் - மனம்திறந்த வினேஷ் போகாட்
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியன்று நான் எதுவும் சாப்பிடவில்லை. போட்டியன்று நான் குடித்த தண்ணீரை கூட வாந்தி எடுத்துவிட்டேன்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்ததில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகாட் பங்கேற்றார். இவர் முதல் சுற்று போட்டியில் சுவீடனின் சோஃபியாவை -1 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிச் சுற்றில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் அணி வீராங்கனை வனீசாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் வனீசா வினேஷ் போகாட்டை பின் செய்து வெற்றி பெற்றார். 53 கிலோ எடைப்பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான வினேஷ் போகாட் பதக்கம் வெல்ல தவறியதால் அவர் மீது பெரும் ஏமாற்றம் எழுந்தது. அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் கிராமத்தில் இல்லை என்ற புகார் எழுந்தது. இதற்காக இந்திய மல்யுத்த சங்கம் அவரை தற்காலிக தகுதி நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய மனநிலை குறித்தும் ஒலிம்பிக் மல்யுத்த போட்டி அன்று என்ன நடந்தது என்று வீனேஷ் போகாட் மனம் திறந்துள்ளார். அதில், "கடந்த இரண்டு வாரங்களாக என்ன நடந்தது என்பதே எனக்கு சரியாக புரியவில்லை. அவை அனைத்தும் எனது தூக்கத்தில் நடந்த கனவை போல் உள்ளது. எதோ எனக்கு எல்லாம் முடிந்தது போல் வெளியே இருப்பவர்கள் என்னை பற்றி பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்தியாவில் எவ்வளவு சீக்கிரம் புகழின் உச்சத்திற்கு செல்கிறோம் அவ்வளவு சீக்கிரம் பதக்கம் வெல்லவில்லை என்றால் கீழே இறங்கிவிடுவோம்.
போட்டி அன்று என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் இஷ்டத்திற்கு அனைத்தையும் எழுதக் கூடாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக நான் என்னுடைய எடை குறைப்பில் இருந்தேன். என்னுடன் டோக்கியோவிற்கு என்னுடைய பிஷியோதெரபிஸ்ட் வரவில்லை. எனக்கு துப்பாக்கிச் சுடுதல் அணியில் இருந்த பிஷியோதெரபிஸ்ட் அங்கு உதவ நியமிக்கப்பட்டார். அவருக்கு மல்யுத்தம் தொடர்பான சரியான புரிதல் இல்லை. அதனால் அதற்கு தேவையான விஷயத்தில் அவரால் எனக்கு உதவ முடியவில்லை. டோக்கியோ மல்யுத்த போட்டிக்கு முந்தைய நாளிலிருந்து நான் எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர் ஆகாரம் மட்டும் எடுத்து கொண்டேன். போட்டியின் நாளன்று காலையில் இருந்து நான் வாந்தி எடுத்தேன். உப்பு கலந்த தண்ணீரை கூட என்னால் குடிக்க முடியவில்லை.
முதல் போட்டியில் என்னிடம் இருந்த பலனை வைத்து வெற்றி பெற்றேன். இரண்டாவது போட்டியில் தொடக்க முதல் நான் தோற்பது என் கண் முன்னே தெரிந்தது. எனக்கு முதல் முறையாக மல்யுத்த மேட்டில் எப்படி புள்ளிகள் எடுப்பது என்பது கூட தெரியாத அளவிற்கு என்னுடைய மூளை இருந்தது. ஒரு மெண்டல் பிளாக் எனக்கு ஏற்பட்டது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இரண்டு முறை நான் கொரோனா தொற்றுக்கு உள்ளானேன். அப்போது முதல் என்னுடைய உடம்பில் ப்ரோட்டீன் சத்து ஏற்று கொள்ளவே இல்லை. ஆகவே நீண்ட நாட்களாக என்னுடைய உடம்பில் ப்ரோட்டீன் சத்து குறைவாகவே இருந்தது. அத்துடன் இரண்டு முறை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதால் நான் தீவிர மன அழுத்தத்தில் இருந்தேன். ரியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் ஏற்பட்டபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். போட்டிக்கு பிறகு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே தற்போது வரை தூங்கியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.