French Open Djokovic: இறுதிப்போட்டிக்கு 7வது முறை.. வரலாறு படைத்த நோவக் ஜோகோவிச்.. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அசத்தல்..!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, நோவக் ஜோகோவிச் ஏழாவது முறையாக முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, நோவக் ஜோகோவிச் ஏழாவது முறையாக முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி:
சர்வதேச அளவில் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற நான்கு வகையான டென்னிஸ் தொடர்கள், ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நடப்பாண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், நேற்று இரவு அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
ஜோகோவிச் - அல்காரஸ் மோதல்:
முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை, தற்போதையை நம்பர் ஒன் வீரரான ஸ்பானிஸை சேர்ந்த வெறும் 20 வயதே ஆன கார்லோஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். இரண்டு முன்னணி வீரர்கள் மோதுவதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருந்தது. ஆரம்பம் முதலே இரண்டு வீரர்களும் மாறி மாறி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார். அடுத்தடுத்து அதிரடியாக விளையாட தொடங்கியபோது, காலில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார். இருப்பினும் விடாது போராடினார். ஆனால், ஜோகோவிச்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை 6-1, 6-1 என அல்காரஸ் இழந்தார்.
வரலாறு படைத்த ஜோகோவிச்:
இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏழாவது முறையாக ஜோகோவிச் முன்னேறினார். இதன் மூலம், 3 முறையாக அவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், அவர் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதோடு, சர்வதேச டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெறுவார். இதனிடையே, கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அதிக அரையிறுதி போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற, மற்றொரு நட்சத்திர வீரரான பெடரரின் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
காஸ்பர் ரூட்:
மற்றொரு அரையிறுதிப்போட்டியில், தரவரிசைப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நார்வே வீரர் காஸ்பர் ரூட், 27வது இடத்தில் உள்ள ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் சுவேருவை எதிர்கொண்டார். காஸ்பர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அலெக்சாண்டர் தடுமாறினார். இதனால், காஸ்பர் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டரை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். கடந்த ஆண்டும் இவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடாலிடம் தோல்வியை தழுவினார். இதுவரை ஒருமுறை கூட இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது இல்லை.
ஜோகோவிச் - காஸ்பர் மோதல்:
இதையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் காஸ்பர் மோத உள்ளனர். இந்த இருவரும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அந்த அனைத்து போட்டியிலும் ஜோகோவிச்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்.