Beach Handball | பிகினிக்கு பதிலாக ஷார்ட்ஸ்.. நார்வே வீராங்கனைகளுக்கு அபராதம்..
பல்கேரியாவில் நடைபெற்ற கடற்கரை கைப்பந்து போட்டியில், பிகினி பாட்டமிற்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய வீராங்கனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பீச் கைப்பந்திற்கான சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் நடைபெற்றது. இந்த போட்டித் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே நாட்டு அணியும், ஸ்பெயின் நாட்டு அணியும் நேருக்கு நேர் மோதின. பீச் கைப்பந்து போட்டியில் பிகினி எனப்படும் உள்ளாடை அணிந்து விளையாடுவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். இந்த போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக களமிறங்கிய நார்வே அணியினர் பிகினி உடைக்கு எதிராக, ஷார்ட்ஸ் அணிந்து களமிறங்கினர்.
இந்த நிலையில், ஐரோப்பியன் கைப்பந்து சம்மேளனம் நார்வே பெண்கள் கடற்கரை கைப்பந்து அணியினரும் பிகினி உடை அணிந்து விளையாட வேண்டும் என்ற விதிகளை மீறியதற்காக, அந்த அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 150 யூரோ அபராதமாக விதித்துள்ளனர். இதனால், நார்வே அணிக்கு மொத்தமாக ரூபாய் 1,500 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கடற்கரை கைப்பந்து ஆட்ட விதிகளின்படி, இந்த போட்டிகளில் பங்கேற்கும் கட்டாயம் பிகினி எனப்படும் உள்ளாடைகளுடன்தான் ஆட வேண்டும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் தங்களது மேலாடைகளாக விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இறுக்கமான உள்ளாடையையே அணிய வேண்டும். இடுப்பின் கீழே கால்களின் இருபுறமும் 10 சென்டிமீட்டருக்கு மிகாமல் உள்ளாடை அணி வேண்டும் என்று உள்ளது.
ஐரோப்பிய கைப்பந்து சம்மேளனத்தின் இந்த அபராதத்தை நார்வே நாட்டு வீராங்கனைகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். பிகினி பாட்டம் அணிந்து விளையாடுவது மிகவும் இழிவானது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், கடற்கரை கைப்பந்து போட்டிகளில் ஆடைகளுக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நார்வே நாட்டு வீராங்கனைகள் நீண்ட காலமாக கடற்கரை கைப்பந்து போட்டிகளில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாட திட்டமிட்டிருந்தனர். நார்வே வீராங்கனை மார்டின் வீல்பேர், ஏன் நாங்கள் ஷார்ட்ஸ் அணிந்து விளையாட முடியவில்லை என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நார்வே கைப்பந்து சம்மேளனம் தங்களது வீராங்கனைகளை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. நார்வே நாட்டு வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அந்த நாட்டு கைப்பந்து சம்மேளனம், நார்வே நாட்டு கைப்பந்து சம்மேளம் வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஐரோப்பிய கைப்பந்து சம்மேளனம் பிறப்பித்த அபராதத்தையும் தாங்களே செலுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்திய மதிப்பின்படி, 1500 யூரோ என்பது 1 லட்சத்து 31 ஆயிரத்து 780 ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. பிகினி பாட்டமிற்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து ஆடியதற்காக நார்வே வீராங்கனைகளுக்கு அபராதம் விதிக்ப்பட்டதற்கு முன்னாள் கைப்பந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.