மயிலாடுதுறை முதல் நேபாளம் வரை - இந்திய கைப்பந்து வீராங்கனை இந்திராணியின் தீர பயணம்..
நேபாளத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளார் இந்திராணி
வறுமையை பொருட்படுத்தாமல் திறமை மூலம் வென்று காட்டியுள்ளார் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை இந்திராணி. மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்து அமைந்துள்ள பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவரின் 2வது மகள் இந்திராணி. 21 வயதாகும் இவர் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி பதக்கம் வென்று தாயகம் திரும்பி பெருமை சேர்த்துள்ளார்.
பள்ளி அளவிலேயே கைப்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டிருந்த இந்திராணி, கல்லூரி கைப்பந்து அணியிலும் சிறப்பாக செயல்பட்டார், இப்படி மாவட்ட அளவு, மாநில அளவு, தேசிய அளவு என முன்னேறி இன்று இந்தியா, பூட்டான், நேபால் ஆகிய நாடுகள் பங்கேற்ற பெடெரேஷன் கப் சர்வதேச போட்டியில் விளையாடும் அளவிற்க்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் பெடெரேஷன் கப் தொடரில் இந்தியாவிலிருந்து 13 வீராங்கனைகள் கலந்துகொண்டனர், அதில் ஒருவராக இந்திய அணிக்காக இறுதி போட்டியில் களமிறங்கி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய இந்திராணிக்கு மயிலாடுதுறை நகராட்சி நூலகத்தில் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது. வெற்றி பெற்ற பலர் பல லட்சியங்களை சொல்வதுண்டு, ஆனால் இந்திராணியோ வருங்காலத்தில் விளையாட்டு ஆசிரியராக உயர்ந்து பல வீரர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்கிறார்.