Womens IPL: மகளிர் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டும் சிஎஸ்கே அணி நிர்வாகம்..
மகளிர் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக எட்டு அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் பிரமாண்ட வளர்ச்சிபெற்று கோடிகள் புரளும் விளையாட்டுத் தொடராக 10 அணிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம்
இந்நிலையில், முதல் முறையாக நடப்பாண்டில் 5 அணிகளை கொண்டு, மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 3ம் தேதி தொடங்கும் மகளிர் ஐபிஎல் தொடர் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று, இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டர் அழைப்பை விடுத்து இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், டெண்டர் விண்ணப்பம் பெற ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
விருப்பும் தெரிவித்துள்ள ஆடவர் அணி நிர்வாகங்கள்:
இந்நிலையில், மகளிர் அணிகளை வாங்கவும் ஆடவர் ஐபிஎல் தொடரில் அணிகளை கொண்டுள்ள சில பிரான்ச்சாய்ஸ்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்கும் விருப்பத்துடன் உள்ளன. இதற்காக டெண்டர் விண்ணப்பத்தையும் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி விருப்பம்:
இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், நாங்கள் ஏல ஆவணத்தை வாங்க விண்ணப்பித்துள்ளோம். இப்போது அதன் பொருளாதாரம் பற்றி அறிய வேண்டும். நாங்கள் ஆர்வமாக உள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸில் பெண்கள் குழு இல்லை என்றால், அது நன்றாக இருக்காது. மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல்:
மகளிர் டி-20 போட்டிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைக்காததால், மகளிர் ஐபிஎல் தொடர் மீது பிசிசிஐ ஆர்வம் காட்டாமல் இருந்தது. ஆனால், மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018 – 2020காலக்கட்டத்தில் மூன்று அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தியது.
ஆனால் தொடர்ந்து அப்போட்டிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாறாக மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், அதை ஊக்கப்படுத்தும் நோக்கில் மகளிர் ஐபிஎல் தொடர் நடப்பாண்டு முதல் நடைபெற உள்ளது.
முதன்முறையாக நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. அணிகளை ஏலத்தில் எடுக்க, ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை விலை ரூ.400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டடுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், அணிகளை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அடிப்படை தொகையையும் பிசிசிஐ நிர்ணயிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.